Astrology
oi-C Jeyalakshmi
மதுரை: திருமணம் ஆகாதவர்களுக்கு நல்ல குணநலன்கள் கொண்ட கணவன், நற்பண்புகள் நிறைந்த மனைவி அமைய அட்சய திருதியை விரதம் கைகொடுக்கும் என்பது நம்பிக்கையாகும். அட்சய திருதியை நாளில், நம்முடைய குலதெய்வத்தை வழிபாடு செய்தால், நமக்கும் நமது சந்ததியரின் வாழ்வு சிறக்கும். அதோடு, இந்நாளில், ஏழை எளியவர்களுக்கு, தயிர் சாதம் தானம் அளித்தால் நம்முடைய ஆயுள் விருத்தியாகும்.
தமிழ் புத்தாண்டு பிறந்து விட்டாலே நமக்கு முதலில் நினைவுக்கு வருவது சித்திரை மாதத்தில் வரும் அட்சய திருதியை நாள் தான். காரணம் அட்சய திருதியை நாளில் தங்கம் வாங்கினால் ஆண்டு முழுவதும் தங்கத்தை வாங்கி குவிக்கலாம் என்ற நம்பிக்கையில், அன்றைய தினம் ஒரு குண்டுமணி அளவாவது தங்கம் வாங்க மக்கள் ஆர்வம் காட்டுவார்கள்.
அட்சய திருதியை நாளில் தங்கம் வாங்குவது மட்டுமல்லாமல், அன்றைய நாளில் நாம் திருதியை விரதம் இருந்தால், நம்முடைய வாழ்வு வளம் பெறும், செல்வம் பெருகும் என்பது ஐதீகம். சயம் என்றால் தேய்தல் என்பது பொருள். அட்சயம் என்றால், என்றைக்கும் தேயாமல் வளர்தல் என்றும் தேயாதது என்று அர்த்தமாகும். இதனால் தான், எல்லா நலன்களையும் குறைவில்லாமல் அள்ளிக்கொடுக்கும் சித்திரை மாத வளர்பிறை திதியை அட்சய திருதியை என்று அழைக்கின்றனர். ஒவ்வொரு மாதமும் திருதியை திதி வந்தாலும், சித்திரை மாத வளர்பிறை திதியே அட்சய திருதியை என்று அழைக்கப்படுகிறது.
விளக்கேற்றுங்கள்
அட்சய திருதியை நாளில் விடியற்காலையில் எழுந்து குளிர்ந்த நீரில் குளித்து முடித்து, முதலில் பூஜை அறையில் கோலமிட வேண்டும். பின்பு லட்சுமி நாராயணர், சிவன் பார்வதி, அன்னபூரணி, லட்சுமி குபேரர் படங்களை வைத்து அவற்றுக்கு விபூதி, சந்தனம், குங்குமம் இட்டு, மாலைகளை இடவேண்டும்.
அந்த படங்களுக்கு முன்பாக குத்துவிளக்கையும் காமாட்சி விளக்கையும் ஏற்றி வைக்க வேண்டும். பின்னர், கோலத்தின் மேல் மரப்பலகையை வைத்து அதன் மீதும் கோலமிட வேண்டும்.
செல்வ வளம் பெருகும்
ஒரு எவர்சில்வர் அல்லது தாமிர சொம்பில் தங்க நாணயம் அல்லது தங்க நகை, சிறிது அரிசி, மஞ்சள், நாணயம், ஆகியவற்றை போட்டு, சொம்பில் நீரை நிரப்பி, அதற்கும் விபூதி, சந்தனம், குங்குமம் இடவேண்டும். அதன் பின்னர், நீர் நிரம்பிய சொம்பில் தேங்காயை வைத்து, சுற்றிலும் சுத்தமான மாவிலையை வைத்து கலசம் தயாரித்து அதை மரப்பலகையின் மீது வைக்க வேண்டும். பின்பு, கலசத்தின் முன்பாக ஒரு வாழை இலையில் மஞ்சள் பிள்ளையார் பிடித்து வைத்து அதற்கும் குங்குமம் இட்டு, பூ மாலை இடவேண்டும். பின் வாழை இலையில் அரிசியை பரப்பி, அதன் மீது விளக்கு ஏற்ற வேண்டும். தொடர்ந்து புதிதாக வாங்கிய தங்க நகைகள், பொருட்களையும் கலசத்திற்கு முன்பு வைத்து தீபாராதனை காட்டி வழிபட வேண்டும். அப்படி செய்தால் வளமான வாழ்வு கிடைக்கும் என்பது ஐதீகம்.
திருமண தடை நீங்கும்
அட்சய திருதியை விரதம் இருந்தால் திருமணம் நடைபெறுவதில் இருந்த தடைகள் நீங்கும். திருமணம் ஆகாதவர்களுக்கு நல்ல குணநலன்கள் கொண்ட கணவன், நற்பண்புகள் நிறைந்த மனைவி அமைய அட்சய திருதியை விரதம் கைகொடுக்கும் என்பது நம்பிக்கையாகும்.
ஆயுள் விருத்தி
அட்சய திருதியை நாளில், நம்முடைய குலதெய்வத்தை வழிபாடு செய்தால், நமக்கும் நமது சந்ததியரின் வாழ்வு சிறக்கும். அதோடு, இந்நாளில், ஏழை எளியவர்களுக்கு, தயிர் சாதம் தானம் அளித்தால் நம்முடைய ஆயுள் விருத்தியாகும். அதோடு பதினோரு தலைமுறைக்கு குறைவில்லா அன்பும், வற்றாத செல்வமும் கிடைக்கும். மூதாதையர்களுக்கு அமாவாசை நாளில் தர்ப்பணம் செய்யத் தவறியவர்கள், அட்சய திருதியை நாளில் தர்ப்பணம் செய்தால், பாவ விமோசனமும் கிட்டும்.
பொருத்தமான வரன் தேர்ந்தெடுக்க தமிழர்களின் No.1 திருமண இணையத்தளத்தில் பதிவு செய்யுங்கள் பதிவு இலவசம்!