News
oi-C Jeyalakshmi
சென்னை: மே மாதம் வந்தாலே போதும் ஏசி ரூமில் இருந்தால் கூட பலருக்கும் வேர்க்கும். அந்த அளவிற்கு அக்னி நட்சத்திர வெயில் பட்டையை கிளப்பும். இந்த மாதத்தில் தமிழ் மாதங்களான சித்திரையில் பாதி நாட்களும், வைகாசியில் பாதி நாட்களும் வருகிறது. இந்த மாதங்களில் உழைப்பாளர் தினம் தொடங்கி சித்ரா பவுர்ணமி, உலக அன்னையர் தினம், உள்ளிட்ட பல முக்கிய தினங்கள் கடைபிடிக்கப்படுகின்றன. எந்தெந்த நாட்களில் என்னென்ன சிறப்பான நாட்கள் என பார்க்கலாம்.
மே மாதத்தில் ஆண்டுதோறும் கோவில்களில் திருவிழாக்கள் களைகட்டும். வெயிலால் ஏற்படும் பாதிப்புகளை தடுக்கவே அம்மன் கோவில்களில் பால்குடம், பூச்சொரிதல் கொண்டாடப்படும். இந்த ஆண்டு எந்த பண்டிகையுமே கொண்டாடப்பட முடியாத அளவிற்கு கொரோனா வைரஸ் லாக் டவுன் முடக்கி போட்டு விட்டது.
வீட்டை விட்டு வெளியே போகாவிட்டாலும் கவலைப்படாதீங்க வீட்டிற்குள்ளேயே முக்கிய பண்டிகைகளை கொண்டாடலாம். எந்தெந்த நாட்களில் என்னென்ன பண்டிகைகள் கொண்டாடப்படுகின்றன என்று பார்க்கலாம்.
- மே 1 உலக மே தினம் உழைப்பாளர் தினமாக கொண்டாடப்படுகிறது. உழைக்கும் மக்களை போற்றுகிறது இந்த நாள்
- மே 2 ஆம் தேதி வாசவி ஜெயந்தி
- மே 3 ஆம் தேதி உலக சிரிப்பு தினம் சிரிக்க தெரிந்தவன் மனிதன் மட்டும்தான். இன்றைய சூழ்நிலையில் பலரும் சிரிக்க மறந்து வருகின்றனர். சிரிப்பதற்காகவே உலக சிரிப்பு தினம் கடைபிடிக்கின்றனர். நல்லா சிரிக்க மன அழுத்தம் மட்டுமல்ல எல்லா நோய்களும் போகும்.
- மே 3ஆம் தேதி வாசவி ஜெயந்தி புதன் ஜெயந்தி புதன் பகவானை நினைத்து விளக்கேற்றி வணங்க கல்வியில் ஏற்பட்டிருந்த தடைகள் நீங்கும்.
- மே 4ஆம் தேதி முதல் அக்னி நட்சத்திரம் ஆரம்பம் வைஷ்ணவ மோகினி ஏகாதசி சந்நியஸ்த ஏகாதசி, பரசுராம துவாதசி கடைபிடிக்கப்படுகிறது.
- மே 5 ருண விமோசன பிரதோஷம். செவ்வாய்கிழமை திரயோததசி திதி பிரதோஷம் வருவது சிறப்பு. கடன் தீர்க்க நல்ல நாள்.
- மே 5 உலக ஆஸ்துமா தினம். கடைபிடிக்கப்படுகிறது. மூச்சடைப்பு, மூச்சு திணறல், இருமல், வறட்டு இருமல், தொண்டை வறட்சி போன்றவை ஆஸ்துமா நோயின் முக்கிய அறிகுறிகள் ஆகும். ஆஸ்துமாவினால் உலகம் முழுவதும் 300 மில்லியன் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இது காற்று மாசுபடுவதினால் அதிகமாக பரவுகிறது. முன்பிருந்ததை விட இப்பொழுது சுற்றுசூழல் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளதால் இந்த நோய் அதிகமாக பரவுகிறது என்று மருத்துவர்கள் கருதுகிறார்கள்.
- மே 6ஆம் தேதி ஸ்ரீ நரசிம்மர் ஜெயந்தி. இறைவன் தூணிலும் இருப்பார் துரும்பிலும் இருப்பார் என்பதை மக்களுக்கு உணர்த்துவதற்காக கடவுள் எடுத்த அவதாரம் நரசிம்ம அவதாரம். இந்த அவதாரம் நிகழ்ந்த நாள் சித்திரை மாதம் சுவாதி நட்சத்திர நன்னாள். இன்றைய தினம் நரசிம்மருக்கு பிடித்தமான எலுமிச்சை பானகம் தாயாரித்து ஏழைகளுக்கு தானம் செய்யலாம்.
- மே 7 சித்ரா பவுர்ணமி, புத்த ஜெயந்தி. சித்ரகுப்தர் அவதரித்த நாள். இந்த நாளில் பூஜை அறையில் விளக்கேற்றி குலதெய்வத்தை வணங்கலாம்.
- மே 8 உலக தலசீமியா நாள். தலசீமியா என்பது ரத்த சோகையின் ஒரு வகை. இது ஒரு மரபணு நோய். ரத்தத்தில் சிவப்பணுக்கள் அழிந்து, புரதத்தின் அளவு குறைவதால் இந்நோய் ஏற்படுகிறது. ரத்த அணுக்களில் ஹீமோகுளோபின் என்ற புரதம் உள்ளது. இந்தப் புரதத்தின் அமைப்பு தவறாக உண்டாகும் பட் சத்தில், ரத்த அணுக்கள் எப் போதும்போல் அல்லாமல் விரைவாக அழிந்து ரத்தசோகை ஏற்படும். ரத்த சோகை உச்சத்தை அடையும்போது தலசீமியா ஏற்படுகிறது. இந்த நோய்க்கு தொடர் சிகிச்சை இல்லா விட்டால், இது வெகுவிரைவில் உயிர் ஆபத்தை ஏற்படுத்தும்.
- மே 10 உலக அன்னையர் தினம். அன்னையின் தியாகம், பெருமையை போற்றும் வகையில் உலக அன்னையர் தினம் கடைபிடிக்கப்படுகிறது.
- மே 12 சர்வதேச செவிலியர் தினம். பொதுமக்களுக்கு செவிலியர்கள் ஆற்றி வரும் உன்னத தொண்டை உலகிற்கு உணர்த்தும் வகையில், சர்வதேச செவிலியர் தினம் ஆண்டுதோறும் மே 12ம் தேதி கொண்டாடப்படுகிறது. 1965ஆம் ஆண்டிலிருந்து உலக செவிலியர் அமைப்பு இந்த தினத்தை அனுசரித்து வருகிறது. கொரோனா வைரஸ் பரவி வரும் இந்த நேரத்தில் செவிலியர் ஆற்றி வரும் தொண்டினை போற்றும் வகையில் செவிலியர் தினத்தை கொண்டாடலாம்.
- மே 15 சர்வதேச குடும்ப தினம். கூட்டுக்குடும்பத்தின் அவசியத்தை அருமையை உணர்த்தும் வகையில் சர்வதேச குடும்ப தினம் ஒவ்வொரு ஆண்டும் மே மாதம் மூன்றாம் வெள்ளிக்கிழமை கடைபிடிக்கப்படுகிறது. கொரோனா வைரஸ் ஊரடங்கு காலத்தில் கூட்டுக்குடும்ப வாழ்க்கைக்கு மாறி வருகின்றனர். இந்த நேரத்தில் சர்வதேச குடும்ப தினத்தை சிறப்பாக வீட்டில் அனைவரும் கொண்டாடலாம். சந்தோஷங்கள், சிறு சிறு சண்டைகள், சமாதானங்கள் என அனைத்தும் நிறைந்த அற்புத அமைப்பு குடும்பம். அது அனைத்து உறவுகளும் சங்கமித்திருக்கும் சமுத்திரம். இன்று கூட்டுக் குடும்பங்கள் சிதைந்து… தனிக் குடும்பங்களாய் பிரிந்து வாழ்கிறோம். காலத்தின் கட்டாயமாய்… இன்றைய நவீன உலகில், வாழ்வாதாரத்திற்காக, சொந்த இடங்களை விட்டு, வெவ்வேறு இடங்களில் பணியாற்றுவோரின் எண்ணிக்கை அதிகரிக்கிறது. குடும்ப உறுப்பினர்கள் ஒன்றாக இருப்பது அரிதாக உள்ளது. குடும்ப கட்டமைப்பிலும் “விரிசல்’ உருவாகிறது. இதைக் கவனத்தில் கொண்டுதான் ஒவ்வொருவரும், குடும்பத்துக்கு முக்கியத்துவம் தர வலியுறுத்தி, மே 15ம் தேதி சர்வதேச குடும்ப தினம் கடைபிடிக்கப்படுகிறது.
- மே 17ஆம் தேதி உலக ஹைபர் டென்சன் தினம். ரத்தக்கொதிப்பு, டென்சன் இன்று உலக அளவில் அதிகரித்து வருகிறது. தங்களுக்கு இருப்பது ஹைபர் டென்சன் என்பதை பற்றி அறியாமலேயே பலர் இருக்கின்றனர். உயர் ரத்த அழுத்தம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் ஆண்டுதோறும் மே 17ஆம் தேதி உலக உயர் ரத்த தினமாக கடைபிடிக்கின்றனர்.
- மே 19 வருதினி ஏகாதசி. வைகுண்ட ஏகாதசிக்கு நிகரான ஒரு ஏகாதசி தினமாக வைகாசி மாதத்தில் வரும் வருதினி ஏகாதசி தினம் இருக்கிறது. மற்ற எந்த ஏகாதசிகளில் விரதம் இருக்க முடியவில்லை என்றாலும் இந்த வருதினி ஏகாதசி தினத்தில் விரதம் இருந்து வழிபடுவது மிகவும் சிறப்பானது
- மே 21 தேசிய தீவிரவார எதிர்ப்பு தினம். முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி மறைந்த தினம் தேசிய தீவிரவாத எதிர்ப்பு தினமாக கடைபிடிக்கப்படுகிறது.
- மே 22 வைகாசி அமாவாசை முன்னோர்களுக்கு தர்ப்பணம் அளிக்கலாம்.
- மே 25 ரம்பா திருதியை. பெண்களுக்கு அதே ஐஸ்வரியத்தோடு பேரழகையும் அள்ளித் தரும் விரதம் ரம்பா திருதியை. சித்திரை மாத அட்சய திருதியை விரதம் போல சிறப்பானது இந்த ரம்பா திருதியை விரதம்.
- மே 28 அக்னி நட்சத்திரம் முடிகிறது. இன்றைய தினம் வீட்டில் குல தெய்வத்திற்கு பானகம் நைவேத்தியம் படைத்து வழிபடலாம்.
- மே 31 உலக புகையிலை ஒழிப்பு தினம். உலகிலுள்ள அனைத்து மக்களும் புகையிலை உபயோகிப்பதால் உண்டாகும் பாதிப்புகளை அறியும் வகையிலும் அதனைப் பற்றி விழிப்புணர்வு கொள்ளும் வகையிலும் புகையிலை பழக்கத்திலிருந்து விடுபடவும் உலக புகையிலை ஒழிப்பு தினத்தை உலக சுகாதார நிறுவனமானது 1988ம் ஆண்டிலிருந்து இன்றுவரை ஒவ்வொரு வருடமும் மே 31ம் தேதி கடைபிடிக்கிறது.
பொருத்தமான வரன் தேர்ந்தெடுக்க தமிழர்களின் No.1 திருமண இணையத்தளத்தில் பதிவு செய்யுங்கள் பதிவு இலவசம்!