News
oi-C Jeyalakshmi
மதுரை: பக்தர்களை தன் கண்ணுக்குள் வைத்து காப்பவள் மீனாட்சி. மதுரையை அரசாளும் மீனாட்சிக்கு தன் கணவர் சொக்கநாதரும், மக்களும்தான் சொத்து. மதுரை நகருக்கு எத்தனையோ சிறப்புகள் இருந்தாலும் மீனாட்சி அம்மன் கோவிலும் சித்திரை திருவிழாவும்தான் உலக பிரசித்தி பெற்றது. இந்த ஆண்டு சித்திரை திருவிழா கொரோனா வைரஸ் பாதிப்பினால் ரத்து செய்யப்பட்டுள்ளது. வைகை ஆற்றின் கரையில் உள்ள மதுரை மாநகரம் புராண வரலாற்று சிறப்புகளும், 2500 ஆண்டுகளுக்கு மேல் பழமையான பழமையான வரலாறும் கொண்ட நகரமாகும். மதுரைக்கு எத்தனையோ சிறப்பான பெயர்கள் உள்ளன. இந்த பெயர்கள் ஒவ்வொன்றும் ஒவ்வொரு காரணம் உள்ளது. சித்திரை திருவிழா ரத்து செய்யப்பட்டுள்ளதால் கவலையில் உள்ள மதுரைவாசிகளே நம்ம மதுரையோட புராணத்தை படிங்க.
மதுரைன்னாலே இனிமைதான். மதுரையில் வசிப்பவர்கள் இனிமையானவர்கள் மட்டுமல்ல பாசங்காரங்களும் கூட. மதுரையை தலைநகரமாகக் கொண்டு எத்தனையோ மன்னர்கள் ஆட்சி செய்திருக்கிறார்கள் என்றாலும் எந்த காலத்திலும் தனது பழமையையும் பெருமையையும் இழந்ததில்லை மதுரை. மணக்கும் மல்லிகைப்பூ, மல்லிகையுடன் போட்டிபோடும் இட்லி நாலு வகை சட்னி, ஜில்லுக்கு ஜிகர்தண்டா, சூடாய் குடிக்க சுக்குக்காபி என பல சிறப்புகள் எப்போதும் இருக்கும்.
அன்னை மீனாட்சி அரசாளும் நகரம் மதுரை. சக்தி ஸ்தலம். சித்திரை முதல் பங்குனி வரை 12 மாதமும் திருவிழா கோலம் காணும் நகரம். கோவில் நகரம் மதுரை. பழமையான இந்த நகரத்தில்தான் சிவபெருமானின் 64 திருவிளையாடல்களும் அற்புதமாக நடந்த புராணகதைகள் உள்ளன. மதுரை மதுரமான ஊர். மதுரைக்கு, கடம்ப வனம் , நான்மாடக்கூடல், கூடல் மாநகர், ஆலவாய், தூங்கா நகரம், மதுராபுரி அப்படின்னு பல பேர் இருக்கு. ஒவ்வொரு பேருக்கும் ஒவ்வொரு புராண பெயர் இருக்கு.
கடம்ப மரங்கள் நிறைந்த மதுரை
ஆதி காலத்தில் கடம்பவனங்கள் நிறைந்த ஊர்தான் மதுரை. ஒருநாள் கடம்ப வனத்தை கடந்து போன ஒரு வணிகர் தனஞ்செயன் கண்ணில் அற்புதமான காட்சி கண்ணில் பட்டது. விண்ணில் இருந்து தேவர்களுடன் இறங்கி வந்த தேவேந்திரன், கடம்பமரத்தின் அடியில் இருந்த சுயம்பு லிங்கத்தை வழிபட்டு சென்ற அதிசய காட்சி கண்ணில் பட்டது. பாண்டிய மன்னன் குலசேகரனிடம் சென்று இந்த தான் கண்டதை கூறினான். இது இறைவனின் திருவிளையாடல் என்பதை உணர்ந்து கடம்ப வனத்தில் சுயம்பு லிங்கத்தை வைத்து கற்கோவில் கட்டினார் மன்னர் குலசேகர பாண்டியன். இன்றைக்கு மீனாட்சி அம்மன் கோவில் தல விருட்சமாக கடம்ப மரம் உள்ளது.
மீனாட்சி அரசாளும் மதுரை
கடம்ப வனத்தில் குலசேகர பாண்டியன் கோவில் கட்டவே சிவபெருமான் தனது ஜடாமுடியின் காட்சி அளித்தார் என்றும் அவரது சடைமுடி கற்றையில் இருந்து சிந்திய அமுதத்துளியால் அந்த பகுதி மதுரமான பகுதியாகவும் பின்னர் மதுரையாகவும் பெயர் பெற்றுள்ளது. மதுரம் என்றாலே தமிழில் இனிமை என்று பெயர். இந்த மதுரையில்தான் பிட்டுக்கு மண் சுமந்து, வளையல் விற்று, விறகு விற்று, மாணிக்கம் விற்று, தருமிக்கு பொற்கிழி அளித்து பல திருவிளையாடல்களை ஆடியிருக்கிறார்
மதுரையின் எல்லை
பாண்டிய மன்னர்களின் தலை நகரம் மதுரை. தலை நகரத்தை விரிவு செய்ய நினைத்த பாண்டிய மன்னன், எல்லையை காட்ட வேண்டும் என்று வேண்டிக்கொண்டார். அப்போது இறைவன் தனது கையில் இருந்த பாம்பிடம் கட்டளையிடவே, அந்த பாம்பு தனது வாலை நீட்டி உடலை கொண்டு நகரத்தை வளைத்து வாயை கொண்டு வாலை பிடித்து எல்லையை காட்டியது. இப்படி பாம்பு எல்லையை சுட்டிக்காட்டியதால் ஆலவாய் என்ற அற்புதமான பெயரை பெற்றது மதுரை. நஞ்சுண்ட ஈசனின் கையில் இருந்த பாம்பு எல்லையை சுட்டிக்காட்டியதால் திருஆலவாய் நகரமானது மதுரை.
சிறப்பான பெயர் பெற்ற மதுரை
கடம்ப வனங்கள் நிறைந்த மதுரை மாநகரத்தில் மருத மரங்களும் நிறைந்திருந்தது இதனாலே மருதை என்று அழைக்கப்பட்டது. மருதைதான் மதுரையாக மாறியதாகவும் கூறுகின்றனர். சங்கம் வைத்து தமிழ் வளர்த்த மதுரையில் மக்கள் கூடி கலந்துரையாடியதால் கூடல்நகர் என்றும் அழைக்கின்றனர். நான்கு பக்கமும் கோட்டை போல சூழ்ந்திருக்கும் ஊர் என்பதால் நான்மாடக்கூடல் என்றும் அழைக்கப்படுகிறது.
தூங்கா நகரத்தின் வரலாறு
தமிழ்நாட்டில் தூங்கா நகரம் என்ற சிறப்பு மதுரைக்கு உண்டு. 24 மணிநேரமும் செயல்படும் கடைகளும் விடிய விடிய இட்லி கடைகள் சுடச்சுட மணக்கும் இட்லி கிடைக்கும் நகரம் மதுரைதான். உறங்கமல் இருக்கும் மதுரை கோவலன் கண்ணகி வாழ்ந்த காலத்திலேயே பகலில் நாலங்காடி சந்தையும் இரவில் அல்லங்காடி சந்தையும் இயங்கியதாக சிலப்பதிகாரத்தில் கூறப்பட்டுள்ளது. மீன் எப்படி கண் சிமிட்டாமல் உறங்காமல் இருக்கிறதோ அதுபோல அன்னை மீனாட்சியும் உறங்காமல் இந்த நகரத்தை சுற்றி வந்து மக்களை காப்பாற்றுகிறார் என்பதாலேயே தூங்க நகரமாக பெயர் பெற்றுள்ளது என்று மீனாட்சி தல புராணத்தில் கூறப்பட்டுள்ளது.