News
oi-C Jeyalakshmi
மதுரை: புத்திகாரகன் புதன், மூளை நரம்பின் நாயகனும் புதன்தான். இந்த புதன் பாதிக்கப்பட்டால் நரம்பு தொடர்பாக பல நோய்கள் ஏற்படுகின்றன. முக்கியமாக பார்கின்சன் நோய் பாதிப்பு ஏற்படுகிறது. நடுக்குவாதம் குறித்த விழிப்புணர்வை மக்களுக்கு ஏற்படுத்தவே உலக பார்கின்சன் நோய் தினம் உலகம் முழுவதும் ஏப்ரல் 11 ஆம் தேதி அனுசரிக்கப்படுகிறது.
நடுக்குவாதம் அல்லது பார்கின்சன் நோய் (Parkinson’s disease) அல்லது பீ.டி என்பது மைய நரம்பு மண்டலத்தைச் சிதைக்கின்ற ஒரு நோய். மூளையில் Dopamine என்கிற ரசாயன குறைபாட்டால் இது ஏற்படுகிறது. பொதுவாக 40 முதல் 60 வயதுக்கு மேற்பட்ட ஆண், பெண் இருபாலருக்கும் இந்த நோய் ஏற்படக்கூடிய வாய்ப்பு உள்ளது. ஜேம்ஸ் பார்கின்சன் என்பவர்தான் இந்த நோயை 1817ஆம் ஆண்டு கண்டறிந்தார் அவரது பெயராலேயே பார்க்கின்ஸன் நோய் என்று அழைக்கப்பட்டு வருகிறது.
நடுக்குவாதத்தால் பாதிக்கப்பட்டவர்கள் அன்றாடம் செய்யக்கூடிய வேலையிலேயே அதன் அறிகுறிகளை உணர முடியும். எந்த ஒரு பொருளையும் கையால் சரியாக பிடிக்க முடியாமல் போவது, ஒரு கப் தண்ணீரையோ, டீ கப்புகளை கூட கைகளில் பிடிக்க முடியாமல் நடுங்குவது, தங்களுடைய பல்வேறு அத்தியாவசிய வேலைகளைக் கூட செய்ய முடியாமல் தங்கள் தேவைகளையும் நிறைவேற்றிக்கொள்ள முடியாமல் தவிக்கிற பல முதியவர்களை நாம் பார்த்திருப்போம். பர்க்கின்சன் உண்டானவர்களுக்கு அவர்களது இயல்பான வேகத்தில் தொய்வு ஏற்படும். மயக்கம், நடுக்கம் ஏற்படும். நடக்கும்போதும், உட்கார்ந்து எழும் போதும் தள்ளாடுவார்கள். சாதாரணமாக அமர்ந்து இருக்கும்போதேகூட கை, கால்கள், உதடுகள் நடுங்கும்.
முதியவர்கள் பாதிப்பு
நடுக்குவாத நோய் வந்தவர்களுக்கு மூளைதான் அதிகமாக பாதிக்கப்படும். இதன் காரணமாக உட்கார்ந்து எழும்போது முன்புறம் அல்லது பின்பக்கம் விழுவதுபோல் எழுவர். 60 வயதை தாண்டும்போது வழக்கத்திற்கு மாறாக மெதுவாக முதியவர்கள் தங்களுடைய வேலைகளை செய்வார்கள். நடுக்கம், பேச்சில் தடுமாற்றம், உட்கார்ந்து எழும்போது தவறி விழுவது போன்ற மாற்றங்கள் ஏற்படும். பாதிப்படைந்த கையால் வேலை செய்யும்போது நடுக்கம் குறையும். மனச் சோர்வு, கோபம் ஏற்படும்போது நடுக்கம் அதிகரிக்கும். இதெல்லாம் நடுக்குவாத நோயின் அறிகுறிகளாகும்.
நரம்பு பாதிப்பு
தமிழ்நாட்டில் நடுக்குவாத நோயின் தாக்கம் இப்போது அதிகமாக இருக்கிறது. நரம்பு சம்பந்தப்பட்ட நோய் அறிகுறிகளோடு 10 நோயாளிகள் ஒரு நாளைக்கு அரசு மருத்துவமனைக்கு வருகின்றனர். அவர்களில் 2 பேர் நடுக்குவாத நோயால் பாதிக்கப்பட்டவர்களாக இருக்கின்றனர். நடுக்குவாதம் பற்றிய விழிப்புணர்வு மேலை நாடுகளில் 18-ம் நூற்றாண்டிலேயே ஏற்பட்டுவிட்டது. ஆனால், இந்தியாவைப் பொறுத்தவரை இன்னும் பலருக்கு நடுக்குவாதம் பற்றி தெரியவில்லை.
மருத்துவ ஆலோசனை
நடுக்குவாதம் என்பது நீரிழிவு, ரத்த அழுத்தம் போல வாழ்நாள் முழுவதும் சிகிச்சையும், கவனிப்பும் தேவைப்படும் நோயாகும். எனவே, மருத்துவர்கள் பரிந்துரைக்கும் மருந்தைத் தொடர்ந்து உட்கொள்ள வேண்டும். அப்போதுதான் இயல்பான வாழ்க்கையை மேற்கொள்ள முடியும். மருந்து உட்கொள்வதைத் தவிர்த்தால் நோயின் தீவிரம் அதிகரிக்கும்.
கவனம் தேவை
நடுக்குவாத நோயால் பாதிக்கப்பட்டவர்களை வெளி இடங்களுக்கு அழைத்துச் செல்லும்போது அவர்கள் மேல் முக்கிய கவனம் செலுத்த வேண்டியது அவசியம். அதனால் திருவிழாக்கள், இல்லத்தில் நடைபெறும் விசேஷங்கள் போன்றவற்றில் அவர்களைத் தவிர்க்கக் கூடாது. நடுக்குவாதம் உள்ளவர்கள் வெளியூர்களுக்கு பயணம் செய்ய வேண்டி இருந்தால், அவர்களைப் பாதுகாப்பாக கூடுதல் கவனம் எடுத்து அழைத்துச் செல்ல வேண்டும்.
ஜோதிடத்தில் நரம்பு நோய் பிரச்சினை
புதன்தான் மூளை மற்றும் நரம்பு மண்டலங்களை ஆள்பவர். புத பகவான் இப்போது மீனம் ராசியில் நீசம் பெற்றிருக்கிறார். புதன் ஒருவரின் ஜாதகத்தில் பலவீனமாக இருக்கும் பட்சத்தில் அவருக்கு ஏதாவது ஒரு காலகட்டத்தில் உடல்ரீதியாகவும், மனரீதியாகவும் சில கோளாறுகள் ஏற்படும். ஒருவரின் ஜாதகத்தில் புதன் நீசமாகவும், 6, 8, 12 ஆகிய கிரகங்களுடன் சேர்ந்தாலும் ஒற்றைத் தலைவலி, கை, கால் வலிப்பு, நரம்புத் தளர்ச்சி, முடக்குவாதம், வலிப்பு, மறதி, உடல் நடுக்கம் போன்றவை ஏற்படும்.
நோய் வர காரணம்
ஜாதகத்தில் புதன் செவ்வாய் கூட்டணி அமைத்து 6,8, 12ஆம் இடங்களில் இருந்தால் ஒய்வில்லாத பணி, யோசனையால் தலைவலி, எரிச்சல், கோபம் ஏற்படும். புதன் மற்றும் சனி கூட்டணி அமைத்திருந்தாலும் மனக்கவலை, தலை வலியால் சோர்வு, தூக்கமின்மை, நரம்பு தளர்ச்சி ஏற்படும். நடைப்பயிற்சி, பிசியோ தெரபி செய்வதன் மூலம் பழைய நிலைக்கு மாற வாய்ப்பிருக்கிறது. பழங்கள், கீரை, வேக வைத்த காய்கறிகளை சாப்பிடலாம். மாத்திரையும் தொடர்ந்து எடுத்துக்கொள்ள வேண்டும்.
பச்சை நிற உணவுகள்
புதனுக்குரிய பச்சைப்பயறு தினமும் சிறிதளவு ஊறவைத்து பச்சையாக சாப்பிடுதல், பச்சை வெண்டைக்காய், பச்சையாக முட்டைகோஸ் சிறிதளவு, உப்பு நீரில் ஊறவைத்த முழு நெல்லிக்காய் ஒன்று என தினமும் சாப்பிட்டு வந்தாலே நரம்பு பலகீனமாக இருப்பவர்கள் வலிமை அடைவார்கள். புதன்கிழமைகளில் பச்சை நிற ஆடைகளை அணியலாம்.
புத பகவான் கோவில்
புதன் கிரகத்திற்கான கோவில் சீர்காழி அருகில் உள்ள திருவெண்காட்டில் அமைந்துள்ளது. இங்கு இறைவன் பிரம்ம வித்யாம்பிகை சமேத ஸ்வேதாரண்யேஸ்வராக எழுந்தருளியிருக்கிறார். காசிக்கு இணையான சிவ ஸ்தலம் இது. அந்தக் காலத்தில், காசிக்குச் சென்று வரமுடியாதவர்கள், இங்கே சென்று வந்துள்ளனர். கல்வியில் சிறக்க புத பகவான்தான், கல்வி, அறிவு, பன்மொழித்திறமை ஆகியவற்றிற்கு அதிபதி. ஜாதகத்தில், புதன் நீசமடைந்திருந்தாலும், அல்லது மறைவிடங்களில் இருந்தாலும், திருவெண்காட்டில் உள்ள புதபகவானை தரிசிக்க நரம்பு பிரச்சினைகள் நீங்கும். மதுரை மீனாட்சி அம்மனை நினைத்து வணங்க நரம்பு பிரச்சினைகள் நீங்க வாய்ப்பு உள்ளது.