Astrology
oi-C Jeyalakshmi
சென்னை: கிறிஸ்த மக்களின் தவக்காலம் சிறப்பு வாய்ந்தது. தேவாலயங்களில் பிராத்தனைகளை களைகட்டும். இந்த ஆண்டு வீடுகளிலேயே பிரார்த்தனை செய்யும் அளவிற்கு கொரோனா வைரஸ் முடக்கி போட்டுள்ளது. புனித வெள்ளி, ஈஸ்டர் பண்டிகைகள் இன்னும் 10 நாட்களில் கடைபிடிக்கப்பட உள்ளது. இதனை முன்னிட்டு பிரபல தேவாலயங்களில் நடைபெறும் திருப்பலி நிகழ்வுகள் லைவ் ஆக தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பாகிறது. அதனை வீட்டில் இருந்தே காணும் கிறிஸ்தவ பெருமக்கள் தங்களின் பிரார்த்தனைகளை முடித்துக்கொள்கின்றனர்.
90s காலக்கட்டத்துக்கு மீண்டும் திரும்பிய இந்தியா
உலகம் முழுவதும் பத்து லட்சம் மக்களை பதம் பார்த்துள்ளது கொரோனா வைரஸ். 50 ஆயிரம் பேரை பலிவாங்கியுள்ளது, இன்னும் பல லட்சம் பேர் சிகிச்சையில் இருக்கின்றனர். கொரோனா தொற்று தடுப்பு நடவடிக்கையாக கோவில்கள், தேவாலயங்களில் வழிபாட்டுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. கோவில்கள் மூடப்பட்டாலும், ஆகம விதிகளின்படி பூஜைகள் வழக்கம்போல நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல் தேவாலயங்களிலும் வழக்கமான பிரார்த்தனைகள் நடைபெற்று வருகிறது.
ஹோலி கொண்டாட்டங்கள் இல்லை, யுகாதி கொண்டாட்டங்கள் இல்லை, 21 நாட்கள் ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளதால் ஏப்ரல் 14ஆம் தேதி வரை மக்கள் பொது இடங்களில் கூட முடியாது. வீடுகளுக்கு உள்ளேயே முடங்கியுள்ளனர்.
ஈஸ்டர் தவக்காலம்
உலகெங்கிலும் உள்ள கிறிஸ்தவர்கள் ஆண்டுதோறும் சாம்பல் புதன் தொடங்கி ஈஸ்டர் வரை தவக்காலம் கடைபிடிப்பது வழக்கம். இந்த ஆண்டிற்கான தவக்காலம் பிப்ரவரி 26 ஆம் தேதி சாம்பல் புதனுடன் தொடங்கி ஏப்ரல் 12ஆம் தேதி ஈஸ்டர் வரை நடைபெறுகிறது. இந்த நாற்பது நாட்கள் தவக்காலத்தின் போது பல்வேறு பக்தி வழிபாடுகள் நடைபெறும். ஆடம்பர செலவுகளை தவிர்த்தல், சுபநிகழ்ச்சிகள் நடத்தப்படுவதை தவிர்த்தல், நோன்பு இருத்தல். அசைவ உணவு தவிர்த்தல் போன்ற வகையில் தங்கள் தவக்காலத்தை கிறிஸ்தவர்கள் கடைபிடிக்கிறார்கள்.
வெறிச்சோடிய தேவாலயங்கள்
கடந்த மார்ச் மாதம் முதலே கொரோனா வைரஸ் அச்சம் காரணமாக தேவாலயங்களில் மக்கள் யாருமின்றியே பிரார்த்தனைகள் நடைபெற்றன.
தலைநகர் ரோமில் உள்ள தன்னாட்சி பெற்ற நாடான வாடிகனும் கடுமையான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. வைரஸ் நோய் பரவல் அச்சம் காரணமாக நூற்றுக்கணக்கான மக்கள் வருகை தரும் வாடிகனின் புகழ்பெற்ற தேவாலயம் தற்போது வெறிச்சோடி காணப்படுகிறது.
போப் ஆண்டவர் பிரார்த்தனை
போப் ஆண்டவர் தனியாகவே பிராத்தனை நடத்தியது உலக வரலாற்றிலேயே இதுவரை நடைபெறாத நிகழ்வாகும். கொரோனா வைரஸ் அச்சம் காரணமாக பிரார்த்தனை செய்பவர்கள் இல்லாமலேயே பாரம்பரிய ஈஸ்டர் வார கொண்டாட்டங்கள், பிரார்த்தனைகள் நடத்தப்படும் என்று வாடிகன் அறிவித்தது.
நேரடி ஒளிபரப்பு
புகழ்பெற்ற நாகை மாவட்டத்தில் உள்ள வேளாங்கண்ணி தேவாலயத்தில் பக்தர்கள் வராவிட்டாலும், திருப்பலி நிகழ்வுகள் வழக்கம்போல நடைபெற்று வருகிறது. தவக்காலத்தில் வரும் ஞாயிற்றுக்கிழமை திருப்பலி மிகவும் விசேஷமானது ஆகும். தேவாலயங்களில் சென்று வழிபட முடியாத கிறிஸ்தவர்கள், தங்கள் வீடுகளிலேயே தொலைக்காட்சி வழியாக திருப்பலி நிகழ்வுகளை கண்டு பிரார்த்தனையில் ஈடுபட்டனர்.
புனித வெள்ளி
இயேசு கிறிஸ்து சிலுவையில் அறையப்பட்ட வாரம் புனித வாரமாக கடைபிடிக்கப்படுகிறது. புனித வாரத்துக்கு முந்தைய 40 நாட்கள் தான் தவக்காலம் ஆகும். சிலுவையில் இயேசு மரிப்பதற்கு முதல்நாள் பெரிய வியாழனாக அனுசரிக்கப்படும். அந்த நாளில் இயேசு தனது சீடர்களின் பாதங்களை கழுவி, அவர்களுடன் உணவருந்தியதை நினைவுபடுத்தும் விதமாக பாதம் கழுவும் சடங்கு நடைபெறும். இயேசு சிலுவையில் அறையப்பட்ட நாள் புனித வெள்ளியாக கடைபிடிக்கப்படும். இந்த ஆண்டு புனித வெள்ளி வரும் 10ஆம் தேதி கடைபிடிக்கப்படுகிறது. ஏப்ரல் 12ஆம் தேதி ஈஸ்டர் பண்டிகை அனுசரிக்கப்படுகிறது. வழக்கம் போல கொண்டாட்டங்கள் எதுவுமின்றி இந்த ஆண்டு வீடுகளிலேயே பிரார்த்தனைகளை முடித்துக்கொள்ள திட்டமிட்டுள்ளனர் கிறிஸ்தவ பெருமக்கள்.