News
oi-C Jeyalakshmi
திருப்பூர்: சிவன் மலை ஆண்டவர் உத்தரவுப் பெட்டியில் தற்போது வேல் வைத்து பூஜிக்கப்பட்டு வருகிறது. வேல் என்பது முருகப் பெருமானின் கையில் உள்ள ஆயுதம். இது அசுரர்களை அழிப்பதற்காக அன்னை பார்வதி தேவி தன்னுடைய முழு சக்தியையும் ஒரு வேலில் அடக்கி, அதை முருகப் பெருமானுக்கு வழங்கியதாக புராணங்கள் தெரிவிக்கின்றன. அதே போல், உலகம் முழுவதும் பரவி அச்சத்தை ஏற்படுத்தி வரும் கொரோனா வைரஸை ஒழிப்பதற்காக, விரைவில் நிச்சயம் நல்லதொரு நடக்கும் என்பதை உணர்த்தவே, ஆண்டவர் உத்தரவுப் பெட்டியில் வேல் வைத்து பூஜிக்கப்பட்டு வருவதாக பக்தர்கள் நம்புகின்றனர்.
திருப்பூர் மாவட்டம் காங்கேயம் நகருக்கு வெகு அருகில் உள்ள புகழ்பெற்ற ஆலயம் சிவன்மலை சுப்ரமணிய சுவாமி கோவில். தமிழ் கடவுளான முருகப் பெருமானுக்கு தமிழ்நாட்டில் அறுபடை வீடுகளும், பிற நாடுகளிலும் கோவில்கள் பல இருந்தாலும், சிவன்மலை சுப்ரமணிய சுவாமி திருக்கோவில் சிறிது வேறுபட்டதாகும்.
மற்ற கோவில்களில் எல்லாம் முருகனுக்கு உகந்த நாட்களான வைகாசி விசாகம், சஷ்டி விரதம், தைப்பூசம், பங்குனி உத்திரம் ஆகிய நாட்களில் திருவிழாக்கள் நடைபெறுவது வழக்கமாகும். இதன் காரணமாகவே அந்த கோவில்கள் அனைத்தும் புகழ்பெற்ற கோவில்களாக உள்ளன. ஆனால் சிவன்மலை சுப்ரமணிய சுவாமி கோவில் இவற்றிலிருந்து முற்றிலும் மாறுபட்டு புகழ்பெற்ற கோவிலாக உள்ளது.
சிவன் மலை ஆண்டவர் உத்தரவு
சிவன் மலை ஆண்டவர் கோவிலில் உள்ள உத்தரவுப் பெட்டி தான் சிறப்புக்கு காரணம். சிவன்மலை சுப்ரமணிய சுவாமி கோவிலில் உள்ள ஆண்டவர் உத்தரவுப் பெட்டியில் வைக்கப்படும் பொருளைப் பொருத்து தமிழ்நாட்டிலும், இந்திய அளவிலும் அதன் தாக்கம் இருக்கும் என்பது இன்று வரை நிரூபிக்கப்பட்டு வருகிறது. இப்பெட்டியில் வைக்கப்படும் பொருளானது, தமிழ்நாட்டிலுள்ள ஏதாவது ஒரு ஊரிலுள்ள பக்தர் ஒருவரின் கனவில் முருகன் அருளாசியால் தோன்றும் பொருள் வைக்கப்படும்.
ஆண்டவர் பெட்டியில் பூஜை
இதில் இன்னொரு ஆச்சரியம் என்னவென்றால், அந்த பக்தருக்கு, இப்படி ஒரு கோவில் உள்ளது என்பதே தெரியாது. அப்படிப்பட்டவரின் கனவில் வரும் பொருள் தான் ஆண்டவர் உத்தரவுப் பெட்டியில் வைக்கப்படும் மேலும் அந்தக் கனவு உண்மை தானா என்பதை இக்கோவிலில் பூ போட்டு பார்த்த பின்பே, கனவில் தோன்றிய பொருள் ஆண்டவர் உத்தரவுப் பெட்டியில் வைத்து தினந்தோறும் பூஜிக்கப்பட்டு வரும்.
உத்தரவு பெட்டியில் பூஜை
அடுத்து யாராவது ஒரு பக்தரின் கனவில் வேறு ஒரு பொருள் வந்து, அது உத்தரவுப் பெட்டியில் வைக்கப்படும் வரையிலும், முந்தைய பொருளே பூஜிக்கப்பட்டு வரும். இதற்கு கால வரம்பு எதுவும் கிடையாது. இது வரையில், பக்தர்களின் கனவில் மண், துப்பாக்கி, மஞ்சள், இளநீர், தங்கம், சர்க்கரை. கணக்கு நோட்டு, பூமாலை, மகாலட்சுமி சிலை, மஞ்சள் தாலி என நூற்றுக்கும் மேற்பட்ட பொருட்கள் ஆண்டவர் உத்தரவுப்பெட்டியில் வைக்கப்பட்டு பூஜிக்கப்பட்டு வந்தன.
மஞ்சள் தாலி கயிறு
இந்நிலையில் கடந்த ஜனவரி மாதம், கோவை மாவட்டத்தை சேர்ந்த பக்தர் ஒருவரின் கனவில் மஞ்சள் தாலிக்கயிறு உத்தரவு வந்துள்ளது. இதையடுத்து ஆண்டவர் உத்தரவுப் பெட்டியில் மஞ்சள் தாலிக்கயிறு வைத்து பூஜிக்கப்பட்டு வருகிறது. இதனால், இந்த ஆண்டு ஏகப்பட்ட சுபகாரியங்கள் நடைபெறும் என்றே அனைவரும் எதிர்பார்த்தனர். ஆனால், யாருமே எதிர்பார்க்காத வகையில், சீனாவில் உருவான கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் பரவி, இன்று வரையில் சுமார் 22 லட்சத்திற்கும் மேற்பட்டவர்களை தாக்கி, சுமார் ஒன்றரை லட்சத்திற்கும் மேற்பட்டவர்களை பலி வாங்கி விட்டது.
கொரோனா நோய் எதிர்ப்பு சக்தி
இந்தியாவிலும் சுமார் பதினான்காயிரம் பேர்கள் வரை கொரோனா வைரஸின் தாக்குதலுக்கு ஆளாகியுள்ளனர். இதுவரை 480 பேர்களை பலி வாங்கிவிட்டது. இதை உணர்த்தவே ஆண்டவர் உத்தரவுப் பெட்டியில் மஞ்சளுடன் தாலிக்கயிறு வந்ததாக தற்போது பக்தர்கள் உணர்ந்து கொண்டுள்ளனர். இதனால் தான், கொரோனா வைரஸின் தாக்குதலில் இருந்து தப்பிக்கவும், நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கவும். வீடுகளில் அதிக அளவில் மஞ்சள் பயன்படுத்தி வருகின்றனர்.
வெள்ளி வேல் முருகன்
அதே சமயம், கொரோனா வைரஸின் தாக்குதலில் இருந்து தப்பிக்க நிச்சயம் அருள் புரிவான் என்று பக்தர்கள் நம்பிக்கை வைத்திருக்கின்றனர். இந்நிலையில், நெல்லை மாவட்டத்தை சேர்ந்த 50 வயது பக்தர் ஒருவரின் கனவில் முருகன் தோன்றி, ஆண்டவர் உத்தரவுப் பெட்டியில் வேல் வைத்து வழிபட்டு வருமாறு உத்தரவிட்டுள்ளார். அந்த பக்தரின் கனவு குறித்து கோவிலில் பூ போட்டு பிரசங்கம் பார்த்த போது, வேல் வைத்து வழிபட உத்தரவு கிடைத்துள்ளது. இதனையடுத்து தற்போது, வெள்ளியில் ஒரு வேல் செய்யப்பட்டு ஆண்டவர் உத்தரவு பெட்டியில் வைத்து வழிபட்டு வருகின்றனர்.
பக்தர்கள் கனவில் முருகன்
தனக்கு வந்த கனவு பற்றி அந்த பக்தர் கூறியபோது, நான் இது வரை ஒரு முறை கூட சிவன்மலை கோவிலுக்கு சென்றதில்லை. என்னுடைய கனவில் வந்து ஆண்டவர் உத்தரவு பிறப்பித்தது. எனக்கு மிகுந்த ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. அந்த கருணைக் கடலான அந்த முருகப் பெருமானின் கருணைப் பார்வை எனக்கு கிடைத்துள்ளது என்று பக்தியுடன் கூறியுள்ளார்.
கொரோனா வைரஸ் அழியுமா
வேல் என்பது முருகப் பெருமானின் கையில் உள்ள ஆயுதம். இது அசுரர்களை அழிப்பதற்காக அன்னை பார்வதி தேவி தன்னுடைய முழு சக்தியையும் ஒரு வேலில் அடக்கி, அதை முருகப் பெருமானுக்கு வழங்கியதாக புராணங்கள் தெரிவிக்கின்றன. கடந்த ஆண்டு மார்ச் மாதம் பெண் பக்தரின் கனவில் வேல் வரவே சில மாதங்கள் வேலை வைத்து பூஜிக்கப்பட்டது. இந்த ஆண்டு உலகம் முழுவதும் பரவி அச்சத்தை ஏற்படுத்தி வரும் கொரோனா வைரஸை ஒழிப்பதற்காக, விரைவில் நிச்சயம் நல்லதொரு தீர்வு கிடைக்கும் என்பதை உணர்த்தவே, ஆண்டவர் உத்தரவுப் பெட்டியில் வேல் வைத்து பூஜிக்கப்பட்டு வருவதாக பக்தர்கள் நம்புகின்றனர்.