Astrology
oi-C Jeyalakshmi
திருச்சூர் / திருநள்ளாறு : கொரோனா வைரஸ் பாதிப்பினால் கேரளாவில் பிரசித்தி பெற்ற திருச்சூர் பூரம் திருவிழா, திருநள்ளாறில் உள்ள சனீஸ்வரன் கோவில் பிரம்மோற்சவ விழாவும் ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு 30 லட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். பல லட்சம் பேர் உயிரிழந்துள்ளனர். இந்தியாவில் பாதிப்பு எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. கொரோனா பாதிப்பால் நாடு முழுவதும் மே 3ஆம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. கோவில்கள் மூடப்பட்டுள்ளன. மசூதிகள் தேவாலயங்கள் மூடப்பட்டுள்ளதால் மக்கள் தங்களின் வீடுகளிலேயே வழிபாடுகளை செய்து வருகின்றனர்.
திருவிழாக்கள் கொண்டாட மத்திய, மாநில அரசுகள் தடை விதித்துள்ளதால் மதுரையின் புகழ் பெற்ற சித்திரை திருவிழா ரத்து செய்யப்பட்டுள்ளது. 25ஆம் தேதியில் கொடியேற்றத்துடன் சித்திரை திருவிழா கோலாகலமாக தொடங்க இருந்த நிலையில், கொரோனா வைரஸ் பரவலால் சித்திரை திருவிழாவையும் கொண்டாட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில் உலகப் புகழ்பெற்ற திருச்சூர் பூரம் திருவிழா கொரோனா பாதிப்பால் ரத்து செய்யப்பட்டுள்ளது. ஆராட்டுபுழா கோயிலில் நடைபெறும் பூரம் விழாவில் திருச்சூர் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் உள்ள யானைகளின் அணிவகுப்பு நடைபெறும். செண்டமேளம், கலை நிகழ்ச்சிகள் என களைகட்டும். இந்த விழாவில் நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து லட்சக்கணக்கான மக்கள் கலந்து கொள்வது வழக்கம்.
இந்நிலையில், மே 3ம் தேதி நடைபெறவிருந்த பூரம் திருவிழா கொரோனா வைரஸ் பாதிப்பால் ரத்து செய்யப்பட்டுள்ளது. மக்கள் கூட்டமாக கூடுவதை தவிர்க்க இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. அன்றைய நாளில் சாதாரண பூஜைகள் மட்டும் நடைபெறும் என திருவம்பாடி தேவசம் போர்டு அறிவித்துள்ளது.
பூரம் திருவிழா இதற்குமுன்பு 1962 ஆம் ஆண்டில் இந்தியா- சீனா இடையே ஏற்பட்ட போரின் போது ரத்து செய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து 58 வருடங்களுக்கு பிறகு கொரோனா பாதிப்பால் தற்போதுதான் பூரம் திருவிழா கொண்டாட்டம் தடைபட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
இதே போல புதுவை மாநிலம் காரைக்கால் திருநள்ளாறில் உள்ள உலக புகழ்பெற்ற சனீஸ்வரன் கோவிலில் ஆண்டுதோறும் பிரம்மோற்சவ விழா சிறப்பாக நடைபெறுவது வழக்கம். சனீஸ்வரன் மற்றும் தர்பாரண்யேஸ்வரர் சாமி தேவஸ்தானத்தை சார்ந்த தர்பாரண்யேஸ்வரர் சாமி கோவில் மற்றும் அதன் உபகோவில்களான அய்யனார் கோவில், பிடாரி அம்மன் கோவில் மற்றும் சீதளாதேவி மாரியம்மன் கோவில் ஆகிய கோவில்களில் வருடாந்திர திருவிழாவான பிரம்மோற்சவ விழா, வருகிற 27ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி, ஜூன் 5ஆம் தேதி வரை நடைபெறுவதாக இருந்தது. இந்த நிலையில் ஊரடங்கு காரணமாக பிரம்மோற்சவ விழா ரத்து செய்யப்பட்டுள்ளது.
இது தொடர்பாக காரைக்கால் மாவட்ட கோவில் நிர்வாக அதிகாரியும், மாவட்ட துணை ஆட்சியருமான ஆதர்ஷ் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், சனீஸ்வரன் கோவில் பிரம்மோற்சவ விழாவில் அனைத்து நிகழ்வுகளும் கோவில் சிவாச்சாரியர்கள், பூசாரிகள், ஊழியர்கள் மற்றும் கிராம மக்கள் பங்களிப்புடன் நடத்தப்பட வேண்டும். அவ்வாறு பிரம்மோற்சவ விழாவை நடத்தினால், அதிக அளவில் மக்கள் கூட்டம் கூடும்.
எனவே கொரோனா நோய் தடுப்பு நடவடிக்கை காரணமாக மாவட்டம் முழுவதும் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக விழா ரத்து செய்யப்படுகிறது. அதே சமயம் சிவாச்சாரியார்களால் கோவிலில் உரிய பூஜைகள் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.