News
oi-C Jeyalakshmi
பட்டனம்திட்டா: கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்கும் வகையில் நாடு முழுவதும் வரும் ஏப்ரல் 14ஆம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளதால், சபரிமலையில் பங்குனி உத்திர திருவிழா இந்த ஆண்டு ரத்து செய்யப்பட்டுள்ளதாக திருவிதாங்கூர் தேவஸ்தானம் அறிவித்துள்ளது. அதே போல் திருவிதாங்கூர் தேவஸ்தானத்தின் கீழ் செயல்படும் அனைத்து கோவில்களின் விழாக்களும் ரத்து செய்யப்பட்டுள்ளதாகவும் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
சபரிமலை ஐயப்பன் கோவிலில் ஒவ்வொரு மாதப்பிறப்பின் போதும், மாதாந்திர பூஜை, படி பூஜை, சித்திரை விஷு பூஜை, மண்டல பூஜை, மகர விளக்கு பூஜை, பங்குனி உத்திர ஆராட்டு திருவிழா பூஜை என அனைத்தும் புகழ்பெற்றதாகும். இதில் மற்ற நாட்களில் மற்றும் விஷேச நாட்களில் பூஜைகள் நடைபெறும்போது 10 வயது முதல் 50 வயதுக்குட்பட்ட பெண்கள் யாரும் அனுமதிக்கப்படுவது கிடையாது.
ஆனால், பங்குனி மாதத்தில் சபரிமலை ஐயப்பனுக்கு பம்பா நதிக்கரையில் நடைபெறும் பங்குனி உத்திர ஆராட்டு திருவிழாவில் பாரபட்சமில்லாமல், அனைத்து வயதுடைய பெண்களும் கலந்துகொண்டு சபரிமலை ஐயப்பனை கண் குளிர தரிசிக்கலாம். ஐயப்பனை பெண்களும் தரிசிக்க வேண்டும் என்ற நோக்கத்தில் தான் ஆராட்டு திருவிழா நடத்தப்படுவதாக கூறப்படுகிறது. இதனால் தான், மற்ற விழாக்களை விட பங்குனி உத்திர ஆராட்டு திருவிழாவை காண அனைத்து வயது பெண்களும் ஆவலோடு காத்திருப்பார்கள்.
ஆராட்டு திருவிழாவின் போது, சபரிமலையில் இருந்து தர்மசாஸ்தாவான ஐயப்பனின் உற்சவர் சிலை பம்பை ஆற்றுக்கு கொண்டுவரப்பட்டு, ஆராட்டு உற்சவம் நடைபெறும். பின்னர் ஐயப்பனை நன்கு அலங்கரித்து அங்குள்ள விநாயகர் கோவிலின் முன்பு சுமார் மூன்று மணி நேரம் வரை வைத்திருப்பார்கள். அந்த சமயத்தில் அனைத்து வயதுடைய பெண்களும் கலந்து கொண்டு பிரம்மச்சாரிய கடவுளான தர்மசாஸ்தா ஐயப்பனை கண்குளிர தரிசனம் செய்வார்கள்.
இந்த ஆண்டு, பங்குனி உத்திர ஆராட்டு திருவிழா வரும் 29ஆம் தேதியன்று தொடங்கி வரும் ஏப்ரல் 7ஆம் தேதி வரை நடைபெறும் என்று திருவிதாங்கூர் தேவஸ்தானம் அறிவித்திருந்தது. ஆனால் தற்போது கொரோனா வைரஸ் தாக்குதல் பீதியால் பங்குனி உத்திர ஆராட்டு திருவிழா ரத்து செய்யப்பட்டுள்ளதாக தேவஸ்தானம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சீனாவில் உருவான கொரோனா வைரஸ் தொற்று உலகம் முழுவதும் பரவி, இது வரையிலும் சுமார் 22 ஆயிரம் பேர்களை வரை பலிவாங்கியதோடு, சுமார் 5 லட்சம் பேர்களை வரை நோய் தொற்றால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். இந்தியாவிலும், இதன் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் உள்ளன. இதுவரை சுமார் 650 பேர்களை வரை கொரோனா வைரஸ் நோய் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். 13 பேர்கள் கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு பலியாகியுள்ளனர்.
வேகமாக பரவி வரும் கொரோனா வைரஸ் தொற்று நோயை கட்டுப்படுத்தி அறவே ஒழிக்கும் விதத்தில், வரும் மார்ச் 31ஆம் தேதி வரை அனைத்து மத வழிபாட்டுத் தலங்களையும் மூடிவிட மத்திய அரசு உத்தரவிட்டது. அதோடு மார்ச் 25ஆம் தேதி நள்ளிரவு முதல் வரும் ஏப்ரல் 14ஆம் தேதி வரை 21 நாட்கள் நாடு முழுவதும் முழு ஊரடங்கு உத்தரவை மத்திய அரசு பிறப்பித்துள்ளது. பொதுமக்கள் யாரும் அத்தியாவசிய தேவைகளை தவிர வேறு எந்த காரணத்திற்காகவும் வீடுகளை விட்டு வெளியே வரக்கூடாது என்றும் தடையுத்தரவு பிறப்பித்துள்ளது.
தற்போதுள்ள நெருக்கடியான சூழ்நிலையை உத்தேசித்து, இந்த ஆண்டு நடைபெறவிருந்த பங்குனி உத்திர ஆராட்டு திருவிழாவை ரத்து செய்ய திருவிதாங்கூர் தேவஸ்தானம் முடிவெடுத்துள்ளது. அதே போல் தேவஸ்தானத்தின் கீழ் செயல்படும் அனைத்து கோவில்களின் திருவிழாக்களும் ரத்து செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது.
வழக்கமாக தமிழ் புத்தாண்டு தினமான சித்திரை மாதப் பிறப்பு பூஜை மற்றும் விஷூ சிறப்பு பூஜைகள் நடத்தப்படுமா என்பது குறித்து பின்னர் அறிவிக்கப்படும். எனவே பக்தர்கள் அனைவரும் இதற்கு முழு ஒத்துழைப்பு அளிக்கவேண்டும் என்றும் தேவஸ்தானம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.