News
oi-C Jeyalakshmi
பழனி : கொரோனா வைரஸ் தொற்று காரணமாக, நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதால் கோவில்களில் பக்தர்கள் தரிசனம் செய்ய அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. பூஜைகள் மட்டுமே நடைபெறுகின்றன. இதனிடையே பிரசித்தி பெற்ற பங்குனி உத்திர திருவிழாவும் தேரோட்டமும் பழனி முருகன் கோவிலில் ரத்து செய்யப்பட்டுள்ளது. அதே போல ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் ரங்கமன்னார் கோவில் திருக்கல்யாணமும் ரத்து செய்யப்பட்டுள்ளது. திருச்செந்தூர் முருகன் கோவிலில் பங்குனி உத்திர திருவிழாவும், சாஸ்தா கோவில்களில் குல தெய்வ வழிபாடும் ரத்தாகியுள்ளது.
3வது ஸ்டேஜை சமாளிக்க ரெடியாகும் இந்தியா..
கொரோனோ வைரஸ் கோர தாண்டவத்திற்கு உலகம் முழுவதும் லட்சக்கணக்கான மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். பல்லாயிரக்கணக்கானோர் உயிரிழந்துள்ளனர். உலகமே பதறிக்கிடக்கிறது. நாடு நாடு எல்லைகள் சீல் வைக்கப்பட்டுள்ளன. விமான போக்குவரத்து முற்றிலும் நிறுத்தப்பட்டுள்ளது. நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. கோவில்கள், மசூதிகள், தேவாலயங்களில் வழிபாடுகள் ரத்து செய்யப்பட்டுள்ளன.

பங்குனி மாதம் பவுர்ணமியில் நடைபெறும் பங்குனி உத்திர திருவிழா ரத்து செய்யப்பட்டுள்ளது. முருகப்பெருமானின் மூன்றாவது படை வீடான பழனியில் பங்குனி உத்திர திருவிழா தேரோட்டம் திருக்கல்யாணம் என களைகட்டும். இந்த ஆண்டு கொரோனா வைரஸ் நோய் தொற்று அச்சம் காரணமாக திருவிழா ரத்து செய்யப்பட்டுள்ளது.
சுமார் ஐயாயிரம் ஆண்டுகள் பழமையான பழனி மலை முருகன் கோவில் கருவறை மூலவரான தண்டாயுதபாணி சுவாமி சிலை முழுவதும் நவபாஷாணத்தால் உருவானது. அகத்திய மகரிஷியின் நேரடி சித்தரான போகர் சித்தர் தவம் செய்து ஒன்பது ஆண்டுகள் 81 சீடர்களின் உதவியுடன் நவபாஷாண மூலிகையால் மனக்கட்டுப்பாட்டில் உருவாக்கியதுதான் பழனி முருகன் சிலை. மூலிகையால் ஆனதால் கருவறை முழுவதும் எப்பொழுதும் ஒருவித நறுமணம் கமழும்.
மூலவர் முழுவதும் நவபாஷாணத்தில் செய்யப்பட்டுள்ளதால். எப்பொழுதும் அந்த சிலை சூடாகவே இருப்பதோடு வியர்வையும் வெளிப்பட்டுக்கொண்டே இருக்கும். வெப்பத்தை கட்டுப்படுத்துவதற்காக நாள்தோறும் இரவில் முருகன் நெற்றியிலும் மார்பிலும் சிறிய வட்ட வடிவில் சந்தனத்தை வைத்து காப்பிடுவதுண்டு. இரவு முழுவதும் வெளிப்படும் வியர்வை சந்தனத்துடன் கலந்து பச்சை நிறமாக மாறியிருக்கும். மறுநாள் அதிகாலையில் நடைபெறும் அபிஷேகத்தின் போது இதை பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்குவது வழக்கம்.
தண்டாயுதபாணி சிலையை குளிர்ச்சியாக வைத்திருப்பதற்காகவே, 64 மிராசு பண்டாரங்கள் மூலம் திருமஞ்சன நீர் எடுத்துவரப்பட்டு, நாள்தோறும் ஆறுகால பூஜைக்கும் அபிஷேகம் நடைபெறும். அதிலும் பங்குனி உத்திர திருவிழாவின் போது பக்தர்கள் கொடுமுடி சென்று தீர்த்தக்காவடியாக புனித நீர் எடுத்து வந்து தண்டாயுதபாணி சுவாமிக்கு அபிஷேகம் செய்வது வழக்கம். இதன் காரணமாகவே மற்ற முருகன் கோவில்களை விட, இக்கோவிலில் பங்குனி உத்திர திருவிழா வெகு சிறப்பாக நடைபெறும். சமீப காலமாக பக்தர்கள் கொண்டுவரும் தீர்த்தத்தால் மூலவரான தண்டாயுதபாணி சுவாமிக்கு அபிஷேகம் செய்வதால், கருவறை முழுவதும் மிகவும் குளிர்ச்சியாகவே இருந்துவரும்.
நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதால், தீர்த்த அபிஷேகம் போதிய அளவில் நடைபெறவில்லை. அதே சமயத்தில், கோவிலில் வழக்கமான பூஜைகள் மட்டுமே நடக்கின்றன. இதனால், கருவறை முழுவதும் சூடு அதிகரித்து காணப்படுகிறது. இந்தக்குறையை நிவர்த்தி செய்ய கோவில் நிர்வாகமே நாள்தோறும் தீர்த்தம் எடுத்து வந்து மூலவரை குளிர்ச்சியாக வைக்க வேண்டும். மேலும், கருவறையைச் சுற்றிலும் நீராளிபத்தியில் தொடர்ந்து நீர் நிரப்ப ஏற்பாடு செய்யவேண்டும். இதன் மூலம் கருவறை எப்போதும் குளிர்ச்சியாக இருக்கும் என பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
பழனி தண்டாயுதபாணி கோவிலில் வரும் மார்ச் 31ஆம் தேதிய பங்குனி உத்திர திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்குவதாக இருந்தது. ஆனால், கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதால், பங்குனி உத்திர திருவிழா மற்றும் அது தொடர்பான அனைத்து நிகழ்ச்சிகளையும் ரத்து செய்வதாகவும், அதே சமயத்தில் வழக்கமாக நடைபெறும் அனைத்து பூஜைகளும், பக்தர்களுக்கு அனுமதியின்றி ஆகம விதிகளுக்கு உட்பட்டு எந்தவிதமான தடங்களும் இன்றி நடைபெறும் என்றும் கோவில் நிர்வாகம் அறிவித்துள்ளது.
திருச்செந்தூர் முருகன் கோவிலில் பங்குனி உத்திர திருவிழாவும் தூத்துக்குடி மாவட்டத்தில் சாஸ்தா கோவில்களில் நடைபெறும் குலதெய்வ வழிபாடும் ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதே போல ஸ்ரீவில்லிபுத்தூர் கோவில் ஆண்டாள் ரங்கமன்னார் திருக்கல்யாணமும் ரத்து செய்யப்பட்டுள்ளது.