News
oi-C Jeyalakshmi
சென்னை: சார்வரி தமிழ் புத்தாண்டு வரும் ஏப்ரல் 14ஆம் தேதி 2020, செவ்வாய்கிழமை பிறக்கிறது. திருக்கணிதப்பஞ்சாங்கப்படி ஆண்டு பிறக்கும் போது மேஷத்தில் சூரியன், ரிஷபத்தில் சுக்கிரன், மிதுனத்தில் ராகு, மீனம் ராசியில் புதன், மகரத்தில் செவ்வாய்,குரு, சனி, தனுசு ராசியில் சந்திரன் கேது என கிரகங்கள் சஞ்சரிக்கின்றன. இந்த சார்வரி ஆண்டுக்கு தமிழில் வீறியெழல் என்று பெயர். சார்வரி தமிழ் புத்தாண்டில் புதனை ராசி அதிபதியாகக் கொண்ட கன்னி ராசிக்காரர்களுக்கு எதிர்பார்ப்புகளும் திடீர் திருப்பங்களும் நிறைந்த ஆண்டாக அமையப்போகிறது.
ஆண்டு கிரகங்களான குரு, சனி, ராகு கேது பெயர்ச்சிகள் சாதமான நிலையில் உள்ளது. சனி பகவான் மகரம் ராசியில் ஆட்சி பெற்றிருக்கிறார். குருவும் அதிசாரமாக சென்றாலும் பின்னர் தனுசு ராசியில் ஆட்சி பெற்று அமர்கிறார். ஆவணியில் மிதுனம் ராசியில் இருந்து ராகு ரிஷபம் ராசிக்கும் கேது பகவான் தனுசு ராசியில் இருந்து விருச்சிக ராசியில் சஞ்சரிக்கிறார். மார்கழி மாதம் வாக்கிய பஞ்சாங்கப்படி சனிப்பெயர்ச்சி நடக்கிறது. இந்த கிரகங்களின் சஞ்சாரம் பார்வை பல ராசிக்காரர்களுக்கு சந்தோஷங்களை தரப்போகிறது.
நிகழும் மங்கலகரமான சார்வரி புது வருடம் உத்தராயணப் புண்ணிய காலம் நிறைந்த திங்கட்கிழமை 13.04.2020 இரவு மணி 7.20க்கு கிருஷ்ணபட்சத்தில் சஷ்டி திதி, மூலம் நட்சத்திரம் 4ம் பாதத்தில் தனுசு ராசி, துலாம் லக்னத்திலும், நவாம்சத்தில் கடகம் ராசி, கும்ப லக்னத்திலும், புதன் ஓரை, கேது மகா தசை சனி புத்தியில் பிறக்கிறது. ஆண்டு தொடங்கும் போது உங்கள் ராசிக்கு நான்காம் வீட்டில் சந்திரன், கேது, ஐந்தாம் வீட்டில் குரு, சனி, செவ்வாய், ஏழாம் வீட்டில் புதன் எட்டாம் வீட்டில் சூரியன் உச்சம் பெற்று அமர்ந்திருக்கிறார்.
சுபகாரியங்கள் நடக்கும்
கன்னி ராசிக்காரர்களே கடந்த சில ஆண்டுகளாகவே உங்களுக்கு சுமாராகவே இருந்தது. ஆண்டு ஆரம்பமே இப்படி இருக்கே வருடம் முழுவதுமே இப்படித்தான் இருக்குமா என்று யோசிக்கிறீங்களா? கவலைப்படாதீங்க மாற்றங்கள் வரும். இந்த ஆண்டு சனியின் சஞ்சாரம், குருவின் அனுக்கிரகம், நவகிரகங்களின் சஞ்சாரங்கள் உங்களுக்கு சாதகமாகவே இருக்கிறது உங்க வீட்டில் சுப காரியங்கள் அதிகம் நடைபெறும். கணவன் மனைவி இடையே நெருக்கம் அதிகமாகும். உங்களுக்கு பணப்பற்றாக்குறை நீங்கும். குரு பகவான் அதிசாரமாக ஐந்தாம் வீட்டில் இருக்கிறார் மன இருக்கம் குறையும். குடும்பத்தில் அமைதி நிலை இருக்கும். சிலருக்கு திருமணம் கை கூடி வரும், குழந்தை பாக்கியம் கிடைக்கும்.
பேச்சில் கவனம்
சனிபகவான் மகரம் ராசியில் இருந்து தனுசு ராசியை நோக்கி வக்ரமடையும் காலத்தில் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். அர்த்தாஷ்டம சனியாக நான்காம் வீட்டிற்கு திரும்புகிறார். அம்மாவின் உடல் நலனில் அக்கறை காட்டுங்கள். இந்த கால கட்டத்தில் பணம் விசயங்களில் கவனமாக இருக்கவேண்டும். வீண் வாக்குவாதங்களை தவிர்க்கவும். சனிபகவான் வக்ரம் முடிந்து மீண்டும் ஐந்தாம் வீடான மகரம் ராசிக்கு செல்லும் காலத்தில் பிள்ளைகளின் எதிர்காலம் பற்றிய கவலைகள் அதிகமாகும். உயர்கல்விக்கான ஏற்பாடுகளை வெற்றிகரமாக செய்து முடிப்பீர்கள்.
கவலைகள் நீங்கும்
இந்த ஆண்டு நீங்கள் வீடு கட்டும் பணியை தொடங்கலாம். பிள்ளைகளின் திருமணத்திற்காக மீண்டும் கடன் வாங்குவீர்கள். சொத்துப்பிரச்சினைகள் தீரும். அம்மா வழி உறவினர்களிடம் பிரச்சினைகள் வரலாம் கவனமாக இருங்க. குருபகவான் நவம்பர் மாதம் மீண்டும் பெயர்ச்சியாகி மகரம் ராசிக்கு மீண்டும் செல்லும் போது பிள்ளைகளுக்கு நன்மைகள் அதிகம் நடைபெறும். எதிர்பார்த்த நிறுவனத்தில் வேலை கிடைக்கும்.
ஒற்றுமை அதிகரிக்கும்
ராகு கேது செப்டம்பர் மாதம் பெயர்ச்சி அடைகிறது. சொத்து விசயங்களில் கவனமாக இருங்க. கேது மூன்றாம் வீடு ராகு ஒன்பதாம் வீட்டிலும் சஞ்சரிக்கின்றனர். வண்டி வாகனங்கள் வாங்குவீர்கள். குல தெய்வ கோவிலுக்கு செல்வீர்கள். கணவன் மனைவி இடையே ஒற்றுமை அதிகரிக்கும். பண வருமானம் வரும். கடன்களை கொடுத்து முடிப்பீர்கள். பூர்வீக சொத்து பிரச்சினைகள் வரலாம் கவனமாக இருங்க. பணப்புழக்கம் அதிகமாகும் பணம் ஒரு பக்கம் வந்தாலும் செலவுகளும் வந்து கொண்டே இருக்கும். வாழ்க்கை துணையின் உடல் ஆரோக்கியத்தில் அக்கறை காட்டுங்கள்.
லாபம் அதிகம் வரும்
வியாபாரம் செய்பவர்களுக்கு இந்த ஆண்டு லாபம் அதிகம் வரும். பழைய சரக்குகள் எல்லாம் விற்று தீரும். திடீர் லாபம் வரும். பங்குச்சந்தை மூலம் லாபம் வரும். கமிஷன் தொழில் செய்பவர்களுக்கு நல்ல லாபம் கிடைக்கும். ஆண்டின் முற்பகுதியில் சில தடைகள் இருந்தாலும் ஆண்டின் பிற்பகுதியில் குறிப்பாக கார்த்திகை முதல் லாபம் அதிகம் கிடைக்கும். என்ன பிசினஸ் செய்தாலும் தடைகள் நீங்கி லாபம் கிடைக்கும். உடல் ஆரோக்கியத்தில அக்கறை காட்டுங்க. அவ்வப்போது சளி தொந்தரவுகள் வரலாம்.
பதவி உயர்வு தேடி வரும்.
சிலருக்கு புதிய வேலைகள் கிடைக்கும். வேலை செய்பவர்களுக்கு புரமோசன் கிடைக்கும். மாணவர்களுக்கு இந்த ஆண்டு ரொம்ப நல்ல ஆண்டாக அமைந்துள்ளது. உயர்கல்வி யோகம் தேடி வரும் பயன்படுத்திக்கொள்ளுங்கள். நல்ல மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெறுவீர்கள். குருவின் ஆசியால் ஆசிரியர்களின் ஆதரவு கிடைக்கும். மொத்தத்தில் சார்வரி தமிழ் புத்தாண்டு எதிர்பார்ப்புகளும் திடீர் திருப்பங்களும் நிறைந்த ஆண்டாக அமைந்துள்ளது. குரு பகவான் சனி பகவான் ஐந்தாம் வீட்டில் சஞ்சரிப்பதால் நீங்க சுவாமி மலை முருகனை வழிபடுங்கள். குல தெய்வ வழிபாட்டிற்கு முக்கியத்துவம் கொடுக்க. சாஸ்தா வழிபாடு அவசியம்.