News
oi-C Jeyalakshmi
சென்னை: சூரிய பகவான் மேஷம் ராசியில் சஞ்சரிக்கும் மாதம் சித்திரை மாதம். மங்கலம் பொங்கும் இந்த மாதத்தினை சித்திரை விஷு என்றும் போற்றுகிறார்கள். சித்திரை மாதம் கிரகங்களின் சஞ்சாரத்தை பார்த்தால் மேஷம் ராசியில் சூரியன் உச்சம், ரிஷபம் ராசியில் சுக்கிரன் ஆட்சி மிதுனம் ராசியில் ராகு, தனுசு ராசியில் கேது, மகரம் ராசியில் செவ்வாய் உச்சம், சனி ஆட்சி செவ்வாய் உச்சம் குரு நீசபங்க ராஜயோகம் பெற்றிருக்கிறார் மிதுனம் ராசியில் புதன் நீசம் பெற்றிருக்கிறார். இந்த மாதம் கிரகங்கள் அற்புதமாக அமைந்துள்ளது. துலாம், விருச்சிகம், தனுசு, மகரம், கும்பம், மீனம் ராசிக்காரர்களுக்கு இந்த சித்திரை மாதம் எப்படி இருக்கும் என்று பார்க்கலாம்.
இந்த மாதம் கிரக மாற்றங்களை பார்த்தால் சித்திரை 11ஆம் தேதி புதன் மேஷம் ராசிக்கு நகர்கிறார். 26ஆம் தேதி ரிஷபம் ராசிக்கு நகர்கிறார். 21ஆம் தேதி செவ்வாய் கும்பம் ராசிக்கு நகர்கிறார். 28ஆம் தேதி சனி வக்ரம் ஆரம்பம். 30ஆம் தேதி சுக்கிரன் வக்ரம் ஆரம்பம். இதனால் சில ராசிக்காரர்களுக்கு சாதகங்களும் சிலருக்கு பாதகங்களும் நடைபெறும்.
சித்திரை மாதம் வசந்தங்கள் நிறைந்த மாதமாகும். மஹா விஷ்ணுவின் தசாவதாரங்களில், பல அவதரங்களுக்கு இடம்கொடுக்கும் பெருமை, சித்திரைக்கு உள்ளது. சித்திரை சுக்ல பஞ்சமியில், மீன் வடிவில் அவதாரம் எடுத்து, பிரளயத்திலிருந்து உலகை மீட்டு, உயிர்கள் மீண்டும் தோன்ற வழி செய்தார் பகவான். மச்ச அவதாரம் நிகழ்ந்ததும் சித்திரையில்தான் என்கின்றனர். நவமி திதியில் ஸ்ரீராம பிரானாக அவதாரம் எடுத்து மக்களைக் காத்தார் பகவான் விஷ்ணு. திருமாலின் நரசிம்ஹ அவதாரம், பரசுராமன் அவதாரம் நிகழ்ந்ததும் இந்த மாதத்தில்தான். சிறப்பு வாய்ந்த இந்த சித்திரை மாதத்தில் துலாம் முதல் மீனம் வரை ஆறு ராசிக்காரர்களுக்கும் பலன்கள் எப்படி இருக்கும் என்று பார்க்கலாம்.
துலாம்
துலாம் ராசிக்காரர்களுக்கு கிரகங்கள் சஞ்சாரத்தை பார்த்தால் மூன்றாம் வீட்டில் கேது, நான்காம் வீட்டில் சனி, செவ்வாய் குரு, ஆறாம் வீட்டில் புதன், ஏழாம் வீட்டில் சூரியன், எட்டாம் வீட்டில் சுக்கிரன், ஒன்பதாம் வீட்டில் ராகு என கிரகங்கள் சஞ்சரிக்கின்றன. இந்த மாதம் உங்களுக்கு அற்புதங்கள் நிறைந்த மாதமாக அமைந்துள்ளது. களத்திர ஸ்தானத்தில் இருந்து உச்சம் பெற்ற சூரியனின் பார்வை உங்க ராசிக்கு கிடைக்கிறது. கணவன் மனைவி இடையே சின்னச் சின்ன கருத்து வேறுபாடுகள் ஏற்படும். விட்டுக்கொடுத்து போங்க. அலைச்சல் வேண்டாம் உடல் ஆரோக்கியம் பாதிக்கப்படும். வேலையில் எதிர்பார்த்த இடத்திற்கு மாற்றங்கள் கிடைக்கலாம் இப்போது உள்ள சூழ்நிலையில் எங்கேயும் போக முடியலையே என்ற வருத்தம் ஏற்படும். பணம், விலை உயர்ந்த பொருட்களையும் கவனமாக பார்த்துக்கங்க. இல்லாவிட்டால் பெரிய அளவில் இழப்பு ஏற்படும். சுய தொழில் செய்பவர்களுக்கு மந்தமான நிலையே ஏற்படும் கவனமாக இருங்க. பிரதோஷ நேரத்தில் சிவபெருமானை நினைத்து வழிபடுங்கள் பாதிப்புகள் நீங்கி நன்மைகள் நடைபெறும். சகோதரர்களால் நன்மை கிடைக்கும். புதிதாக வீடு நிலம் வாங்க பேச்சுவார்த்தைகள் நன்மையில் முடியும்.
விருச்சிகம்
விருச்சிகம் ராசிக்காரர்களே உங்க ராசிக்கு கிரகங்களின் சஞ்சாரத்தை பார்த்தால் இரண்டாம் வீட்டில் கேது மூன்றாம் வீட்டில் சனி, செவ்வாய், குரு, ஐந்தாம் வீட்டில் புதன், ஆறாம் வீட்டில் சூரியன், ஏழாம் வீட்டில் சுக்கிரன் எட்டாம் வீட்டில் ராகு என கிரகங்கள் சஞ்சரிக்கின்றன. இந்த மாதத்தில் நீங்க எடுக்கும் முயற்சிகள் அனைத்திலும் வெற்றி கிடைக்கும். பணவரவு பல வழிகளில் இருந்தும் வரும். தொழில் வியாபாரத்தில் பெரிய அளவில் முதலீடுகள் எதுவும் இப்போதைக்கு செய்ய வேண்டாம். நிதானமாக அடி எடுத்து வைப்பது நல்லது. நினைத்த காரியம் நிறைவேறும். பிரச்சினைகள் முடிவுக்கு வரும் வழக்குகளில் வெற்றி கிடைக்கும். வீடு நிலம் வகையில் பணம் வரவு கிடைக்கும். அப்பா உடன் சச்சரவு உண்டாகும். வியாபாரத்தில் லாபம் கிடைக்கும் சரக்குகள் அனைத்தும் விற்று தீரும். வரவே வராது என்று நினைத்த பணம் வீடு தேடி வரும்.
தனுசு
தனுசு ராசிக்காரர்களே, இந்த மாதம் கிரகங்களின் சஞ்சாரத்தை பார்த்தால் ராசியில் கேது, இரண்டாம் வீட்டில் சனி, செவ்வாய், குரு, நான்காம் வீட்டில் புதன், ஐந்தாம் வீட்டில் சூரியன், ஆறாம் வீட்டில் சுக்கிரன், ஏழாம் வீட்டில் ராகு என கிரகங்கள் சஞ்சரிக்கின்றன. இந்த மாதம் பணவரவு அற்புதமாக இருக்கும். உங்க வார்த்தைகளில் கவனமாக இருங்க. கோபமாக பேசாதீங்க. வீட்ல விட்டுக்கொடுத்து போங்க. இந்த மாதம் சொத்துக்கள் வாங்கலாம் ஆனால் அதன் தாய் பத்திரம் மூல பத்திரங்களை கவனமாக பார்த்து வாங்கவும். பணம் கொடுக்கல் வாங்கலில் லாபம் கிடைக்கும், பல நாட்களாக வராத பணம் கைக்கு வரும். இந்த மாதம் மகாவிஷ்ணுவை வணங்குங்கள் நன்மைகள் நடைபெறும்.
மகரம்
மகரம் ராசிக்காரர்களே, இந்த மாதம் உங்க ராசிக்கு கிரகங்களை பார்த்தால் உங்க ராசியில் சனி,கேது, குரு மூன்றாம் வீட்டில் புதன், நான்காம் வீட்டில் சூரியன் ஐந்தாம் வீட்டில் சுக்கிரன், ஆறாம் வீட்டில் ராகு என கிரகங்கள் சஞ்சரிக்கின்றன. உங்க ராசியில் உள்ள கிரகங்கள் உங்களின் மன அழுத்தத்தை போக்கும், எதிர்பாராத உதவிகள் கிடைக்கும். உங்களின் நிதி நிலைமை நன்றாக இருக்கும். உங்களின் திறமையும் தன்னம்பிக்கையும் அதிகரிக்கும். வேலையில் இருப்பவர்களுக்கு பதவி உயர்வு தேடி வரும். விஐபிக்களின் உதவி வீடு தேடி வரும். வெளியூர், வெளிநாடு போக வேண்டும் என்கிற எண்ணங்களை மூட்டை கட்டி வையுங்கள். உங்களின் விருப்பங்கள் தடையின்றி நிறைவேறும். வருமானம் அதிகம் வரும் கடன்கள் குறையும். வியாபாரம் செய்பவர்களுக்கு லாபம் கிடைக்கும். வியாழக்கிழமைகளில் குரு பகவானை வணங்குங்கள் நன்மைகள் நடைபெறும்.
கும்பம்
கும்பம் ராசிக்காரர்களே இந்த மாதம் உங்க ராசிக்கு கிரகங்களை பார்த்தால் இரண்டாம் வீட்டில் புதன், மூன்றாம் வீட்டில் சூரியன், நான்காம் வீட்டில் சுக்கிரன்,ஐந்தாம் வீட்டில் ராகு, விரைய ஸ்தானத்தில் சனி, கேது, குரு, லாப ஸ்தானத்தில் கேது என கிரகங்கள் சஞ்சரிக்கின்றன. உங்களுடைய முயற்சிகளுக்கு வெற்றி கிடைக்கும். உங்களுக்கு இந்த மாதம் பணவரவு தாராளமாக இருக்கும். விரைய செலவுகள் அதிகமாக இருக்கும். வரவு நிறைய வருதே என்று அதிகம் செலவு பண்ணாதீங்க. அப்புறம் பணம் சேமிக்க முடியாம போயிரும். வேலையில் இருப்பவர்களுக்கு டென்சன் குறையும். பெரிய அளவில் பண முதலீடு செய்யாதீங்க. வியாபாரம் செய்பவர்களுக்கு நல்ல லாபம் கிடைக்கும். யாருக்கும் ஜாமீன் கையெழுத்து போடாதீங்க. உங்க ஆரோக்கியம் அற்புதமாக இருக்கும். செலவுகள் அதிகரிக்கும். பாதிப்புகள் நீங்கி வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் கிடைக்க நீங்க சனி பகவானை வழிபடுங்க.
மீனம்
மீனம் ராசிக்காரர்களே இந்த மாதம் கிரகங்களின் சஞ்சாரத்தை பார்த்தால் உங்க ராசிக்குள் புதன், இரண்டாம் வீட்டில் சூரியன், மூன்றாம் வீட்டில் சுக்கிரன்,நான்காம் வீட்டில் கேது என கிரகங்கள் சஞ்சரிக்கின்றன. உங்க வருமானம் அதிகரிக்கும். உங்க குடும்பத்தில் இந்த மாதம் மகிழ்ச்சி அதிகரிக்கும். சுபிட்சம் அதிகரிக்கும். வாக்கு ஸ்தானத்தில் சூரியன் இருப்பதால் கோபமாக பேசாதீங்க. உடல் ஆரோக்கியம் அற்புதமாக இருக்கும். நிதி நிலைமை நன்றாக இருக்கும். வீட்டிற்குத் தேவையான பொருட்களை வாங்குவீர்கள். வீட்டில் இருந்தே வேலை செய்பவர்கள் திறமையாக செயல்படுவீர்கள். சிலருக்கு தகுதிக்கேற்ற புதிய வேலை கிடைக்கும். பூர்வீக சொத்துக்கள் மூலம் உங்களுக்கு பணம் வரவு வரும். சரியான நேரத்திற்கு சாப்பிடுங்க. உங்க ஆரோக்கியத்தில் அக்கறை காட்டுங்கள் இல்லாவிட்டால் பிரச்சினையாகிவிடும்.