Astrology
oi-C Jeyalakshmi
சென்னை: கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் பத்து லட்சம் பேரை பாதித்துள்ளது. 55 ஆயிரம் பேரின் உயிரை குடித்துள்ளது. இந்தியாவில் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் 50க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். நாடு முழுவதும் 21 நாட்கள் ஊராடங்கு அமல்படுத்தப்பட்டுள்ள நிலையில் 10ஆம் நாளான இன்று வீடியோ மூலம் மக்களிடம் பேசிய பிரதமர் மோடி, ஏப்ரல் 5ஆம் தேதி ஞாயிறன்று இரவு 9 மணிக்கு 9 நிமிடங்கள் வீடுகளில் விளக்கேற்றுங்கள் என்று கேட்டுக்கொண்டுள்ளார். வழக்கம் போல பலர் இதற்கு மீம்ஸ் போட்டு கிண்டல் செய்தாலும், ஆன்மீக ரீதியாக பார்த்தால் அன்றைய தினம் இரவு 7.30 மணிக்கு மேல் பிரதோஷம் தொடங்குகிறது. ஞாயிறு பிரதோஷம் மிருத்யுஞ்ஜய பிரதோஷமாக கடைபிடிக்கப்படுகிறது. எனவேதான் அன்றைய தினம் மரண பயம் நீங்க விளக்கேற்றி வழிபட சொல்லியிருக்கிறார் பிரதமர் மோடி.
பிரதோஷம் மாதத்தில் இரண்டு முறை கடைபிடிக்கப்படுகிறது. தேய்பிறை பிரதோஷம், வளர்பிறை பிரதோஷம் என இரண்டு பிரதோஷ விரத நாளிலும் சிவன் நந்தியை வழிபடுவது சிறப்பு. அமாவாசை முடிந்து 13வது நாள் திரயோதசி திதி வளர்பிறை பிரதோஷமாகும். இதே போல பவுர்ணமி முடிந்து 13வது நாள் திரயோதசி நாளில் தேய்பிறை பிரதோஷமாகும்.
பிரதோஷ விரதம் இருந்தால் தோஷங்கள் நீங்கும் என்பது நம்பிக்கை. இன்றைய கால கட்டத்தில் கொரோனா வைரஸ் வடிவத்தில் உலக மக்களை தோஷம் பீடித்துள்ளது. வரும் ஞாயிறன்று சிறப்பு வாய்ந்த மிருத்யுஞ்ஜய பிரதோஷம் கடைபிடிக்கப்படுகிறது.
பிரதோஷ விரதம்
பொதுவாகவே பிரதோஷ விரதம் அனைத்து தோஷங்களையும் நீங்கும். சனிப்பிரதோஷம் மகா பிரதோஷமாக கடைபிடிக்கப்படுகிறது. சனிதோஷம் போக்கும் என்பது மக்களின் நம்பிக்கை. அதே போல திங்கட்கிழமை வரும் பிரதோஷம் சோமவார பிரதோஷம் சிவபெருமானுக்கு உகந்த நாள். சிவனை வழிபட சந்திரனால் ஏற்பட்ட தோஷம் நீங்கும்.
மிருத்யுஞ்சய பிரதோஷம்
அதே போல ஞாயிறன்று வரும் பிரதோஷ நாள் சூரியனுக்கு உகந்தது. சூரிய திசை நடப்பவர்கள் கண்டிப்பாக ஞாயிறு அன்று வரும் பிரதோஷ நாளில் சிவனை வழிபட வேண்டும். இதனால் சூரிய பகவான் அருள் நமக்கு கிட்டும். இந்த திசையினால் வரும் துன்பம் விலகும். பிரிந்த குடும்பம் ஒன்று சேரும்.
ஞாயிறு பிரதோஷ நாளில் சிவனை நினைத்து விளக்கேற்றி வழிபட்டால் வறுமை நீங்கும், நோய்கள் தீரும், கடன் தொல்லைகள் நீங்கும். தடைபட்ட சுபகாரியங்கள் நடைபெறும். மரண பயம் நீங்கி மகிழ்ச்சி அதிகரிக்கும்.
மிருத்யுஞ்ஜய மந்திரம்
நோயினால் பாதிக்கப்பட்டவர்கள் நோய்கள் நீங்கவும் மரண பயம் போகவும் பிரதோஷ நேரத்தில் வீட்டில் விளக்கேற்றி வழிபடலாம்.
மகா மிருத்யுஞ்ஜய மந்திரத்தை தொடர்ந்து தினமும் சொல்லி வந்தால் விரைவில் நோய் குணமாகும் என்பது உறுதி.
ஓம் த்ரயம்பகம் யஜாமஹே சுகந்திம் புஷ்ட்டிவர்த்தனம்
உருவாருகமிவ பந்தனாத் ம்ருத்யோர் முக்ஷீய மாம்ருதாத் ஓம்
விளக்கேற்றுங்கள்
இப்போது கொரோனா வைரஸ் வடிவத்தில் நாட்டு மக்களை தோஷம் பீடித்துள்ளது. இதனால் பல ஆயிரக்கணக்கான மக்கள் மன உளைச்சலுக்கும் நோய் பற்றிய அச்சம் மரண பயணத்தினாலும் இருக்கிறார்கள். எனவேதான் ஞாயிறன்று இரவு 8 மணி முதல் 9 மணி வரை சூரிய ஹோரை வருகிறது. 9 மணிக்கு மேல் சுக்கிர ஹோரை தொடங்குகிறது.
வறுமை நீங்கும்
பொதுவாகவே வீட்டில் விளக்கேற்றுவது நன்மைதான். தீபாவளி, திருக்கார்த்திகை நாளில் வீடுகள் தோறும் விளக்கேற்றி வைப்பார்கள். இப்போது நோய் பயம் உள்ள இந்த இக்கட்டான நேரத்தில் நோய்கள் நீங்க சூரிய பகவானுக்காகவும் வறுமை நீங்கி பொருளாதார வளம் பெற சுக்கிரனை நினைத்தும் அனைத்து மக்களும் விளக்கேற்றுங்கள் என்று சொல்லியிருக்கிறார் பிரதமர் மோடி.