News
oi-C Jeyalakshmi
கர்நூல்: மல்லிகார்ஜுனேஸ்வரர் கோவிலில் தினந்தோறும் நடைபெறும் நித்ய நைவேத்ய பூஜையின் போது, கொடி மரத்தின் அருகிலுள்ள மகா நந்தி தேவருக்கு நைவேத்யம் படைக்கப்படுவது கிடையாது. ஆனால், ஒவ்வொரு செவ்வாய்க் கிழமை, பிரதோஷம் மற்றும் சிவராத்திரி தினங்களில் மட்டும் மகா நந்திக்கு ஊறவைத்த கொண்டைக்கடலையை ஒரு மஞ்சள் துணியில் வைத்து, அதை மகா நந்தியின் வாயோடு வைத்து கட்டி வைப்பது வழக்கம். ஆனால், இதைப் பற்றிய உண்மையான வரலாறு தெரியாமல், கோவிலுக்கு வரும் சிலர், நந்தி தேவருக்கு அணிவித்திருந்த முககவசத்தை போட்டோ எடுத்து சமூக வலைதளங்களில் பதிவிட்டு, கடவுளுக்கே கொரோனா வைரஸ் வந்துவிட்டது என்று வதந்தியை பரப்பி வருகின்றனர்.
12 ஜோதிர் லிங்கங்களில் ஒன்றாக விளங்குவது ஆந்திர மாநிலம் கர்நூல் மாவட்டத்திலுள்ள மல்லிகார்ஜனேஸ்ர் கோவில். இக்கோவிலின் மூலவரான மல்லிகார்ஜுனேஸ்வரர் சுயம்புவாக தோன்றியவர். மேலும் இங்குள்ள உடனுறை பிரம்மராம்பாள் தேவி, அன்னை பராசக்தியில் 51 மஹாசக்தி பீடங்களில் மூன்றாவது சக்தி பீடமாகவும் விளங்குகிறது. இதன் காரணமாகவே, இக்கோவிலுக்கு தட்சிண கைலாயம் என்ற பெயரும் உண்டு.
மல்லிகார்ஜுனேஸ்வரர் கோவில், தேவாரம் பாடிய சைவ சமயக்குறவர்களான அப்பர், சம்பந்தர் மற்றும் சுந்தரர் என மூவராலும் பாடல் பெற்ற ஒரே வெளி மாநில கோவில் என்னும் புகழ்பெற்றது. கிருதயுகத்தில் இரணிய கசிபுவும், திரேதாயுகத்தில் ஸ்ரீராமபிரானும், துவாபுரயுகத்தில் பாண்டவர்களும், தற்போது கலியுகத்தில் மராட்டிய சிங்கம் சத்ரபதி சிவாஜியும் வழிபட்ட புண்ணிய தலமாகும். முக்கியமாக சிவபெருமானின் அவதாராமான ஸ்ரீ ஆதி சங்கரர், சிவானந்த லஹரி எனும் நூலை இக்கோவிலில் தான் எழுதியதாகவும் கூறப்படுகிறது.
கருவறைக்குள் அனுமதி இல்லை
மற்ற கோவில்களுக்கு செல்வதாக இருந்தால், பெரும்பாலும் குளித்து முடித்து, சுத்தபத்தமாக சாப்பிடாமல் தான் செல்வது நடைமுறை. மேலும், கோவிலின் கருவறைக்கு வெளியில் நின்று தான் சுவாமி தரிசனமும் செய்ய முடியும். முறைப்படி ஆகம விதிமுறைகளை பின்பற்றும் பூசாரிகளை தவிர வேறு யாரும் கருவறைக்குள் நுழைய முடியாது. ஆகம முறைப்படி அப்படி தரிசனம் செய்வது தான் மரபாக பின்பற்றப்பட்டு வருகிறது.
குளிக்காமலே சாமி தரிசனம்
மல்லிகார்ஜுனேஸ்வரர் கோவிலுக்கு செல்வதற்கு எந்தவிதமான நித்திய கர்மங்களையும் பின்பற்ற வேண்டியதில்லை. குளிக்காமல், கொள்ளாமல் கூட, நேராக கோவிலுக்கு சென்று மல்லிகார்ஜுனேஸ்வரரை கண் குளிர தரிசிக்கலாம். அதோடு மட்டுமில்லாமல், இந்து சமயத்தினர் யாராக இருந்தாலும, சாதி பேதமின்றி அனைவரும் நேராக கருவறைக்குள்ளேயே சென்று, மூலவரான மல்லிகார்ஜுனேஸ்வரரையும் தொட்டு பூஜையும் செய்யலாம். யாரும் எந்தவித மறுப்பும் சொல்வதில்லை. இதை தூளி தரிசனம் என்று அழைப்பதுண்டு.
முப்பது அடி உயரத்தில் அம்பாள் சன்னதி
அதே போல், அனைத்து இந்துக் கோவில்களிலும் மூலவர் அமைந்துள்ள கருவறையின் அருகிலேயே, அம்பிகையின் கருவறையும் அமைந்திருக்கும். அது தான் வழக்கமாகும். ஆனால், இக்கோவிலில் மட்டும், மூலவரான மல்லிகார்ஜுனேஸ்வரர் கருவறை கீழ் இருக்க, முப்பது படிகள் உயரத்தில் ஸ்ரீபிரம்மாம்பாள் தேவியின் சந்நதி அமைந்துள்ளது.
சாகா வரம் பெற்ற நந்தி
இக்கோவிலின் மற்றொரு சிறப்பு, சிவபெருமானின் வாகனமான நந்தி தேவர், இங்கு தவமிருந்து தான், சாகா வரமும், சிவனின் வாகனமாக அமைய வரமும் பெற்றார் என்பது ஐதீகம். நம்மூர் கோவில்களி பிரதோஷத்தன்று நந்தி தேவரை வணங்கினால் கோடி புண்ணியம் கிடைக்கும் என்பது நம்பிக்கை. அப்படி இருக்க, நந்தி தேவரின் அவதார தலமான மல்லிகார்ஜுனேஸ்வரர் கோவிலில் உள்ள நந்தி தேவரை வணங்கினால், முக்தி கிடைக்கும் என்பது இந்துக்களின் நம்பிக்கையாகும்.
நந்திக்கு முககவசம்
இக்கோவிலில் நாள்தோறும் நடைபெறும் நித்ய நைவேத்ய பூஜையின் போது, கொடி மரத்தின் அருகிலுள்ள மகா நந்தி தேவருக்கு நைவேத்யம் படைக்கப்படுவது கிடையாது. ஆனால், ஒவ்வொரு செவ்வாய்க் கிழமை, பிரதோஷம் மற்றும் சிவராத்திரி தினங்களில் மட்டும் மகா நந்திக்கு ஊரவைத்த கொண்டைக்கடலையை ஒரு மஞ்சள் துணியில் வைத்து, அதை மகா நந்தியின் வாயோடு வைத்து கட்டி வைப்பது வழக்கம். இது காலங்காலமாக தொடர்ந்து பின்பற்றப்பட்டு வரும் நடைமுறை மற்றும் ஐதீகமாகும்.
கடளுக்கே கொரோனா வைரஸ்
ஆனால், இதைப் பற்றிய உண்மையான வரலாறு தெரியாமல், கோவிலுக்கு வரும் சிலர், நந்தி தேவருக்கு அணிவித்திருந்த முககவசத்தை போட்டோ எடுத்து சமூக வலைதளங்களில் பதிவிட்டு, கடவுளுக்கே கொரோனா வைரஸ் வந்துவிட்டது. அதனால் தான், அவருக்கு முக கவசம் அணிவித்துவிட்டனர் என்றும், இதெல்லாம் ரொம்ப ஓவர் என்றும் கிண்டலடித்து வதந்தியை பரப்பி வருகின்றனர்.
குழந்தை பாக்கியம் கிட்டும்
குழந்தை பாக்கியம் இல்லாத தம்பதியினர், இக்கோவிலுக்கு சென்று இங்குள்ள நந்தி தேவரை மனமுருக வணங்கி பிரார்த்தனை செய்தால் விரைவில் புத்திர பாக்கியம் கிடைக்கும். அது மட்டுமில்லாமல், வேலையில்லாமல் கஷ்டப்படுபவர்கள் மூக்குக்கடலை என்னும் கொண்டைக் கடலையை வாங்கி இக்கோவிலின் தேவஸ்தானத்திற்கு கொடுப்பதுண்டு. அதை வ்ருத கல்ப முறையில் நைவேத்ய பிரசாதமாக படைப்பார்கள். அப்படி செய்தால் விரைவில் நல்லதொரு வேலை வாய்ப்பு கிடைக்கும் என்பதும் நம்பிக்கையாகும்.