News
oi-C Jeyalakshmi
சென்னை: இந்தியாவின் இதிகாசமான ராமாயணத்தில் சொல்லப்படாத கருத்துக்களே இல்லை. மகாவிஷ்ணு மனிதனாக அவதரித்து தனது மனைவி சீதையை கவர்ந்து சென்ற ராவணனை அனுமன் உள்ளிட்ட வானர சேனையோடு சென்று போரிட்டு வதம் செய்து வெற்றி பெற்றதை சொல்லும் காவியம். இந்த காவியத்தில் உயிர்காக்கும் சஞ்சீவி முலிகை பற்றி சொல்லப்பட்டுள்ளது. ராம ராவண யுத்தத்தில் இந்திரஜித் ஏவிய பிரம்மாஸ்திரம் தாக்கி மயக்கமான லட்சுமணன் உயிரை காக்க சஞ்சீவி மலையையே பெயர்த்து எடுத்து வந்தார் லட்சுமணன். சஞ்சீவி மூலிகை போல மருந்துகளை அனுப்பி வைத்து மக்களை காக்க வேண்டும் என்று இந்திய பிரதமருக்கு கோரிக்கை வைத்துள்ளார் பிரேசில் அதிபர் ஜெயிர் போல்செனாரோ.
உயிரைக் காக்கும் அனைத்துமே சஞ்சீவிதான். சுத்தமான காற்றும் நீரும் கூட சஞ்சீவிதான். இப்போது கொரோனா வைரஸ் தாக்கத்தில் பல உயிர்கள் பலியாகிக்கொண்டிருக்கையில் இந்த வைரஸ் பிடியில் இருந்து மக்களை காக்கும் எந்த மருந்துமே சஞ்சீவிதான் எனவேதான் இந்திய பிரதமர் நரேந்திர மோடிக்கு பிரேசில் அதிபர் ஜெயிர் போல்செனாரோ எழுதிய கடிதத்தில், அனுமன் எப்படி சஞ்சீவி மூலிகையை கொண்டு வந்து லக்ஷ்மனின் உயிரை காப்பாற்றினாரோ அது போல் இந்தியா ஹைட்ராக்ஸிகுளோரோகுயின் மருந்தை வழங்கி பிரேசில் மக்களின் உயிரை காக்க வேண்டும் என்று ராமாயணத்தை மேற்கோள் காட்டியிருக்கிறார்.
ராமாயணம் படித்தவர்களுக்கும் தொலைக்காட்சிகளில் சீரியல்களாக பார்த்தவர்களுக்கும் யுத்த கள காட்சியை மறந்திருக்க முடியாது. சீதையை மீட்க வானர சேனையோடு இலங்கைக்கு தனது தம்பி லட்சுமணன், அனுமனுடன் சென்றார் ஸ்ரீராமர். தினம் தினம் போர் உக்கிரமாகவே நடைபெற்றது. சீதை எப்படியாவது மீட்டாகவேண்டும் என்பதால் ராம லட்சுமணர் தலைமையில் வானர சேனையும், ராவண சேனையும் பயங்கரமாக மோதிக்கொண்டன.
இந்திரஜித்
செஞ்சோற்று கடன் தீர்க்க தன் அண்ணனுக்காக ராமரை எதிர்க்க வந்த கும்பகர்ணன் இறந்து விட்டான். ராவணன் பக்கத்தில் பலரும் மாண்டு விட்டனர். குடும்பத்தில் உள்ளவர்களை அடுத்தடுத்து போருக்கு அனுப்பிக் கொண்டிருந்தான் ராவணன். தனது புதல்வன் மேகநாதன் என்ற இந்திரஜித்தை போருக்கு அனுப்பி வைத்தான். அவனோ மாயங்கள் புரிந்து போர் செய்பவன்.
சிதறிய வானர சேனை
அம்பு எந்த பக்கமிருந்து வருகிறது என்று கண்டுபிடிக்க முடியாத வகையில இந்திரஜித், தன்னை எதிர்த்த வான சேனையை பயங்கரமாக தாக்கினான். அவன் மறைந்திருந்து தாக்குதல் நடத்தியதில் வானர படைகளைச் சேர்ந்த பலர் சிதறி விழுந்தனர். ஏராளமானவர்கள் காயமடைந்தனர். பலர் உயிரிழந்தனர்.
மயங்கிய லட்சுமணன்
வானர சேனையை சிதறடித்த இந்திரஜித், பிரம்மாஸ்திரத்தை எடுத்து லட்சுமணனை குறிவைத்தான். அது சீறிப்பாய்ந்தது. பாய்ந்து செல்லும்போது வழியில் இருக்கும் அனைவரையும் தாக்கியபடி பறந்து சென்றது அந்த அம்பு. இறுதியாக லட்சுமணனை தாக்கியது. பிரம்மாஸ்திரத்தில் இருந்து தப்பிக்க முடியாமல் மண்ணில் மயங்கி சரிந்தான் லட்சுமணன். இதனை பார்த்ததும் ராமர் ஓடி வந்தார். தனது தம்பியின் உயிர் காக்க என்ன செய்வது என்று யோசித்தார்.
அனுமனை அழைத்த ஸ்ரீராமர்.
அனுமனை அழைத்து புதிய கட்டளை ஒன்றை பிறப்பித்தார். அனைவரையும் பிழைக்க வைக்க ஒரு வழி உள்ளது. அது உன்னால் மட்டுமே முடியும் என்று சொன்னார். இமயமலை பகுதியில் சஞ்சீவி மலை ஒன்று உள்ளது. அதில் பல அதிசய மூலிகைகள் இருக்கின்றன. இறந்தவர்களை உயிர் பிழைக்க செய்யும் மூலிகை, சிதைந்து போன உருவத்தை மீண்டும் பழையபடியே பெறுவதற்கான மூலிகை என்று தனித்தனியாக உள்ளது. அங்கு சென்று அந்த மூலிகைகளை கொண்டுவா. தாமதம் பெரிய இழப்பை ஏற்படுத்தி விடும். விரைந்து வா என்று சொல்லி முடித்த விநாடியே பறந்து போனார் அனுமன்.
உயிர் காத்த சஞ்சீவி மலை
பறந்து வந்த அனுமன் சஞ்சீவி மலையை அடைந்து விட்டார் அங்கு இருந்த பல மூலிகைகளில், எது ஸ்ரீராமர் சொன்ன மூலிகை என்பதில் பெரும் குழப்பம் ஏற்பட்டுவிட்டது. யோசிக்கவேயில்லை மலையை பெயர்த்து எடுத்தார். கையில் ஏந்திக்கொண்டு பறந்து இலங்கைக்கு சென்றார். நினைத்து பாருங்கள். இமயமலையில் இருந்து இலங்கைக்கு சட்டென்று பறந்து போய்விட்டார். அந்த மலையில் இருந்த மூலிகைகளின் காற்றை சுவாசித்ததுமே பலரும் உயிர் பிழைத்தனர். பலரது காயங்கள் மாயமாகிப் போனது. உறுப்புகள் இழந்தவர்கள் உறுப்புகளை பெற்றனர்.
உயிர் பிழைத்த லட்சுமணன்
மயங்கியிருந்த லட்சுமணன் சஞ்சீவி மூலிகை காற்றை சுவாசித்ததும் தூக்கத்தில் இருந்து விழிப்பது போல விழித்தெழுத்தார். இதைப்பார்த்த ராமரின் கண்களில் இருந்து ஆனந்த கண்ணீர் பெருகியது. அவர் தம்பியை தழுவிக்கொண்டார். தம்பி பிழைக்க காரணமாக இருந்த தனது அன்புக்கு பாத்திரமான அனுமனையும் கட்டித் தழுவிக்கொண்டார். இப்போது இந்தியாவிடம் இருக்கும் ஹைட்ராக்ஸிகுளோரோகுயின் மருந்தைதான் பலரும் உயிர்காக்கும் சஞ்சீவி மூலிகையாக நம்பிக்கொண்டிருக்கிறார்.
சஞ்சீவி மூலிகை கிடைக்குமா?
சஞ்சீவி மூலிகை இமயமலை பகுதிகளில் கிடைக்க வாய்ப்பு இருக்கிறது என்று உத்தரகண்ட் அரசு கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு அந்த மூலிகையை தேட நிதி ஒதுக்கியது. மனித குலம் காக்க மீண்டும் சஞ்சீவி மூலிகையை அனுமன் அனைவருக்கும் கொடுக்க வேண்டும் என்று வட இந்தியாவில் அனுமன் ஜெயந்தி கொண்டாடப்படும் இந்த நேரத்தில் வேண்டிக்கொள்வோம்.